அவர்கள் இறைவனின் ஐக்கியத்தை நம்பினர்
(They Believed in the Fellowship of The Lord - Acts 1:12)
ஆதித் திருச்சபை விசுவாசிகள் தேவ ஐக்கியத்தை மிக மேன்மையாகக் கருதினார்கள்.
தேவ பிரசன்னம் மகிழ்ச்சியை
ஒலிவமலையிலிருந்து சீடர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் எருசலேமுக்கு திரும்பினார்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சரீரப் பிரகாரமாக அவர்களுடன் இருக்கவில்லை. ஆனாலும் அவர் பிரசன்னம் தங்களுடன் இருக்கிறது என அவர்கள் முழு உள்ளத்துடன் நம்பினார்கள். இந்த நம்பிக்கையால் அவர்கள் உள்ளம் மிகுந்த சந்தோஷத்தினால் நிறைந்து வழிந்தது. (லூக்கா 24:52).
ஆண்டவரது பிரசன்னம் நம்முடன் இருந்தால் நமது வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.
தேவ பிரசன்னம் தைரியம் அளிக்கிறது:
ஆண்டவர் கைது செய்யப்பட்ட போது யூதர்களுக்குப் பயந்ததால் சீடர்கள் அவரைத் தனியாக விட்டுவிட்டு ஓடி ஒளிந்து கொண்டார்கள். தங்கள் அறையைப் பூட்டிக் கொண்டு திகிலுடன் வாழ்ந்தார்கள்.
பின்னர் உயிர்த்தெழுந்த ஆண்டவரை அவர்கள் தரிசித்தனர். அவரது பிரசன்னம் தங்களுடன் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டனர். அந்த நம்பிக்கை அவர்களுக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு அவர்கள் அனுதினமும் தைரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் எருசலேம் தேவாலயத்தில் தேவனைத் துதித்துப் புகழ்ந்து தொழுது கொண்டார்கள். (லூக்கா 24 : 53).
தேவ பிரசன்னம் மனநிறைவு அளிக்கிறது:
கெத்சமனே தோட்டத்தில் ஆண்டவர் தமது சீடர்களைப் பார்த்துக் கேட்ட கேள்வி மிக முக்கியமானது.
"நான் உங்களைப் பணப்பையோ, பொருட்கள் வைக்கும் பையோ, மிதியடியோ எதுவுமில்லாமல் அனுப்பியபோது, உங்களுக்கு ஏதாவது குறை இருந்ததா?" என்று கேட்டார். சீடர்கள், "ஒரு குறையும் இருந்ததில்லை" என்றார்கள். (லூக்கா 22:35).
இதிலிருந்து நாம் கற்றுக் கொள்வது பணம், பொருட்கள், மதிப்பு இவற்றைக் காட்டிலும் ஆண்டவருடன் இணைந்து வாழும் வாழ்க்கை மன நிறைவைத் தரும்.
தேவ மனிதர் மோசே இந்த உண்மையை நன்கு அறிந்திருந்தார். ஆகவே தான் அவர் ஆண்டவரிடம் இப்படிச் சொன்னார்.
"உமது பிரசன்னம் கூடவரவில்லையெனில் எங்களை இங்கிருந்து போகச்செய்யாதீர்`. (யாத்திராகமம் 33:15).
தேவ பிரசன்னம் என்பது சமாதானம்.
ஆண்டவர் உயிர்த்தெழுந்த பின்னர் சீடர்களைச் சந்தித்தவுடன் சொன்ன முதல் வார்த்தை சமாதானம். அவர்களைப் பார்த்துப் பயப்படாதிருங்கள் என்றார். அவர் பிரசன்னம் மன அமைதி தருகிறது. மன கொந்தளிப்பு அடங்குகிறது.
என்னுடைய சமாதானத்தையே நான் உங்களுக்குத் தருகிறேன் என அவர் வாக்குறுதி அளித்தார். அவர் சமாதானக் காரராகிய கர்த்தர்.
திருத் தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய கடிதத்தில்,
கனிந்த உங்கள் உள்ளம் எல்லா மனிதருக்கும் தெரிந்திருக்கட்டும். ஆண்டவர் அண்மையில் உள்ளார். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம்.
ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள்.
அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த தேவ சமாதானம் கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும். (பிலி 4: 5-7).
தற்பரிசோதனை:
நம் வாழ்வில் எல்லாவற்றையும் விட ஆண்டவரது பிரசன்னம் தான் மிக முக்கியமானது என நம்புகிறோமா? தற்பரிசோதனைக்காக ஒரு சில கேள்விகள்:
1. நமது வாழ்வில் இரண்டு சம்பவங்கள் நிகழ்வதாக வைத்துக் கொள்வோம். பணம் பத்தாயிரம் ரூபாய் தொலைந்து விட்டது. ஒரு வார ஆராதனையில் கலந்து கொள்ள முடியாமல் போகிறது. இதில் எந்த நிகழ்வு நம் மனதில் அதிக கவலையை ஏற்படுத்தும்? எதை நினைத்து அதிகமாகத் தவித்துப் போகிறோம்?
2. ஒரு ஆராதனையில் கலந்து கொள்ள வேண்டும். அதே நாளில் மாலையில் சொந்த ஊருக்குப் போக வேண்டும். ஊருக்குப் சில பொருட்கள் வாங்கி உடன் எடுத்துச் செல்ல வேண்டும். எது முக்கியம்? எங்குச் செல்லத் திட்டமிடுகிறோம்?
3. காலையில் எழுந்தவுடன் எந்த செயலை செய்வதற்கு மிகுந்த ஆர்வம் வருகிறது? What's app, face book, Instagram, emails, TV news பார்ப்பது அல்லது Bible reading? எது அதிக மன மகிழ்ச்சியை அளிக்கிறது?
4. ஒரு TV serial, shows, games அல்லது Bible reading இவற்றில் எதில் ஈடுபடும் போது நேரம் போவதே தெரிவதில்லை?
5. நமது ஜெப நேரம், பொழுது போக்கிற்குச் செலவிடும் நேரம் இவற்றுள் எதற்காக அதிக நேரம் செலவிடுகிறோம்?
இந்த கேள்விகளுக்கான பதில்கள் நாம் எதை அதிகமாக நேசிக்கின்றோம் என்பதை வெளிப்படுத்தும்.
தேவ பிரசன்னம் நிறைந்த மக்கள் செய்ய விரும்பும் செயல்கள் என வேதம் கூறுபவை:
1. ஆண்டவரைப் பணிந்து தொழுகை செய்தல் (Praying in obedience),
2. அவரை புகழ்ந்து, போற்றி, நன்றியுடன் துதித்து ஆராதனை செய்தல் ( Praise and Worship with gratitude),
3. வேதத்தைக் கிரமமாகத் தியானிப்பது (Regular Bible Meditation),
4. ஜெப விண்ணப்பத்துடன் தேவ சமூகத்தில் காத்திருப்பது (Sincere Prayer)
5. ஆண்டவருடைய பிள்ளைகள் ஐக்கியத்தை விரும்புதல் (Believers Fellowship) .
தேவ பிரசன்னத்தில் வாழ்ந்த தேவ மனிதர்கள் கூறிய வசனங்கள்:
நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். (சங்கீதம் 27:4).
மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து பவனியாகக் கடவுளின் இல்லத்திற்குச் சென்றேனே! ஆர்ப்பரிப்பும் நன்றிப்பாடல்களும முழங்க விழாக்கூட்டத்தில் நடந்தேனே! இவற்றையெல்லாம் நான் நினைக்கும்போது, என் உள்ளம் வெகுவாய் வெதும்புகின்றது. (சங்கீதம் 42:4).
ஆகவே யோர்தான் நிலப்பகுதியிலும், எர்மோன், மீசார் மலைப்பகுதிகளிலுமிருந்து உம்மை நினைக்கிறேன். (சங்கீதம் 42:6).
பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவதுபோல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன்.(சங்கீதம் 119:14).
ஏனெனில், உம் ஒழுங்குமுறைகள் எனக்கு இன்பம் தருகின்றன; அவையே எனக்கு அறிவுரையாளர்.(சங்கீதம் 119:35).
உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை! என் வாய்க்குத் தேனினும் இனிமையானவை.(சங்கீதம் 119:103).
உம் ஒழுங்குமறைகளை என்றும் என் உரிமைச் சொத்தாய்க் கொண்டுள்ளேன். ஆகவே, அவை என் இதயத்தை மகிழ்விக்கின்றன.(சங்கீதம் 119: 111).
உம் விதிமுறைகளைச் செயல்படுத்துவதில் என் உள்ளம், என்றென்றும், இறுதிவரை நாட்டம் கொண்டிருக்கும். (சங்கீதம் 119:112).
ஆகவே, பொன்னிலும் பசும்பொன்னிலும் மேலாக உம் கட்டளைகளை விரும்புகின்றேன். (சங்கீதம் 119:127).
திரண்ட கொள்ளைப் பொருளை அடைந்தவன் மகிழ்வது போல உமது வாக்குறுதியில் நான் மகிழ்ச்சியுறுகின்றேன்; (சங்கீதம் 119: 162).
"கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள்", என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். (சங்கீதம் 122:1 ).
விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, ஆம்;, விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் ஆண்டவருக்காக ஆவலுடன் காத்திருக்கின்றது. (சங்கீதம் 130: 6).
ஆகவே தான் திருத் தூதர் யோவான் தமது முதலாம் திருமுகத்தில் இவ்விதம் எழுதியுள்ளார்.
நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது. (1 யோவான் 1:3).
We Proclaim To You What We Have Seen And Heard, So That You Also May Have Fellowship With Us. And Our Fellowship Is With The Father And With His Son, Jesus Christ.
ஆண்டவருடைய திருப் பிரசன்னத்தில் தரித்திருப்பதை விட மேலான ஆசிர்வாதம் வேறு எதுவும் இந்த உலகில் இல்லை. ஆமென்.

No comments:
Post a Comment