நான்கு முக்கிய சம்பவங்கள்.
அப்போஸ்தல நடபடிகள் நூலில் பல சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவற்றுள் நான்கு நிகழ்வுகள் மிக மிக
1. ஆவியானவர் ஆளுகை:
"பெந்தேகொஸ்தே" எனும் நாளில் சீடர்கள் மேல் தூய ஆவியானவர் இறங்கினார். அதனால் இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமை அவர்களுக்குக் கிடைத்தது. அதுவரை அச்சத்துடன் பயந்து வாழ்ந்தவர்கள், அதன் பின்னர் "இயேசு உயிர்த்தெழுந்தார்" எனத் தைரியமாகச் சாட்சி பகிர்ந்தனர். அதனால் கிறிஸ்தவம் எனும் மாபெரும் உலகளாவிய சமயம் உதித்தது (அதிகாரம்: 2).
2. அனைவரும் இறைவனின் குழந்தைகள்:
தாங்கள் மட்டுமே இறைவனது குழந்தைகள் என "யூதர்கள்" உரிமை கொண்டாடினர். ஆனால் கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை. அவர் எந்தவொரு தனிப்பட்ட இனம், சாதி, மொழி, நிறம் இவற்றிற்குச் சொந்தம் கிடையாது.
எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவர்கள் அவருக்குப் பிரியமானவர்கள். இந்தக் கோட்பாடு தீர்மானமாக நிறுவப்பட்டது (8:5, 8: 26-39, 10: 1-48).
3. குறிப்பிட்ட ஆலயம் - சடங்குகள் - பலிகள் வழிபாடு முறை முற்றுப் பெற்றது.
"இறைவன் எருசலேமை ஆலயத்தில் மட்டும் தான் இருக்கிறார். பாவத்தைப் போக்க மிருகங்கள், பறவைகளை அங்குக் கொண்டு வந்து பலி செலுத்த வேண்டும்" எனப் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பின்பற்றப் பட்ட பாவ நிவாரண பலிகள், சடங்கு முறைகள் நிறுத்தப்பட்டது.
அதற்கு மாறாக, "நமது உடல் தான் இறைவனது ஆலயம். எங்கு இரண்டு அல்லது மூன்று பேர் ஒருமனதாக இறை வேண்டல் செய்கின்றனரோ, அங்கு அவர்கள் நடுவில் இறைவன் எழுந்தருளுவார்" எனப் போதிக்கப்பட்டது. வீடுகளில் மக்கள் இறை வழிபாடு செய்யும் வழக்கம் தோன்றியது.
வழிபாட்டில் அருளுரை முக்கிய இடம் பிடித்தது. அங்கு அருளப்பட்ட போதனைகளில் சிந்தையில் மாற்றம் உருவாக வேண்டும் என வலியுறுத்தப் பட்டது. அன்பு, உண்மை, கிருபை, மறுபிறப்பு, விசுவாசம், மனத்தூய்மை, இரக்கம், மன்னிப்பு, கருணை, நீதி, எளிமை, தாழ்மை, அடக்கம், பொறுமை, பாடுகளைச் சகித்தல் போன்ற கிறிஸ்துவின் உபதேசங்கள் போதிக்கப்பட்டது (15: 1-29).
4. அடக்குமுறை நடவடிக்கைகளால் கிறிஸ்தவம் வளர்ச்சி அடைந்தது.
கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் முதல் 30 வருடங்களுக்கு யூத சமயத் தலைவர்களால் கடும் துன்பத்தை அனுபவிக்க நேர்ந்தது.
ஏனெனில் யூத சமய சடங்குகள், பல வழிபாட்டு முறைகளை கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட யூதர்கள் எதிர்த்தனர். அதனால் யூதர்களுக்குள் பிளவு ஏற்பட்டது.
அதன் விளைவாக யூத சமயத்தின் பிடியிலிருந்து கிறிஸ்தவம் வெளியேறி தனித்துவ அடையாளத்தை அடைந்தது. இல்லையென்றால் கிறிஸ்தவம் யூத மதத்தின் உட்பிரிவாக இருந்திருக்கும்.
கி. பி. 60லிருந்து கி. பி. 320 வரை ரோம ஆட்சியாளர்கள் கிறிஸ்தவர்களை கடுமையாக துன்பப்படுத்தினர். பல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர்.
எனினும் அதிகாரம், உபத்திரவம், சிறையில் அடைத்தல், கடும் கட்டுப்பாடுகள் இவற்றால் கிறிஸ்துவர்களை அழிக்க முடியவில்லை. இறுதியில் ரோமப் பேரரசின் அதிகாரப்பூர்வமான சமயமாகக் கிறிஸ்தவம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
(4:1-7, 4:15-18, 5:24-33, 7:1-60,8:3-4, 9:23-25, 12:1-4, 13:45, 13:50, 14:19, 16:19-24, 17:5-8, 18: 12-17, 19:23-41, 20:3, 21:28-22:25, 23:1-10, 24:1-21, 25;7-12).

No comments:
Post a Comment