Sunday, 12 September 2021

அதிகாரம் 1: முதல் தலைமுறை கிறிஸ்தவர்களின் விசுவாசம்

நம்பிக்கைகள்.



பொற்காலம்: 

திருச்சபை வரலாற்றில் முதல் மூன்று நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் மிக மிக உயர்வான ஆவிக்குரிய நிலையில் செயல் பட்டு வந்தனர். அது போன்றதொரு உயர்ந்த வாழ்க்கை வேறு எந்த காலகட்டத்திலும் இருந்ததில்லை. 

அவர்கள் பரிசுத்த ஆவியானவரை முழு மனதுடன் பின்பற்றி அர்ப்பணிப்பு உணர்வுடனும் வாழ்ந்தனர். அவர்களது நோக்கமெல்லாம் இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமைப் படுத்தப் பட வேண்டும் என்று இருந்தது. இது ஆவியானவர் செயல் புரிகிறார் என்பதற்கு ஓர் சான்று. 

அவர்களிடம் காணப்பட்ட ஆறு முக்கிய நம்பிக்கைகளை முதல் அதிகாரத்தில் பார்க்கலாம். அவை நாம் பின்பற்ற வேண்டிய நல்லதொரு வழிகாட்டியாக இருக்கிறது. 

ஆறு முக்கிய நம்பிக்கைகள்:

1. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஆண்டவர் என நம்பினார்கள். 

(They Believed in the Risen Christ - 1:3)

2. கிறிஸ்துவின் இரண்டாவது வருகையை நம்பினார்கள். 

(They Believed in the  Assurance of His Coming Again - 1: 9-11)

3. ஆண்டவரது ஐக்கியத்தை நம்பினார்கள். 

(They Believed in the Fellowship with the Lord - 1: 12-14)

4. விசுவாசிகளது ஐக்கியத்தை நம்பினார்கள். 

(They Believed in the Fellowship of Each Other - 1: 12-14)

5.  ஜெபத்தின் வல்லமையை நம்பினார்கள். 

(They Believed in Prayer - 1:14/24-25)

6. கடவுளின் வழிநடத்துதலை நம்பினார்கள். 

( They Believed in God's leading - 1:15-23).


1. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஆண்டவர் என நம்பினார்கள். 

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்னர் 40 நாட்கள் சீடர்களுடன் இருந்தார். அவர் ஏறக்குறைய 500 நபர்களுக்குத் தரிசனம் தந்தார் என வேதம் சொல்கிறது. 

எனினும் அவர் உயிர்த்தெழுந்தார் என்பதை முதலில் கேள்விப்பட்ட போது அதைச் சீடர்கள்  நம்பவில்லை (மாற்கு 16:11-14). 

அவர் அவர்கள் கண்களைத் திறந்தார் (லூக்கா 24: 31). மனதைத் திறந்தார் (லூக்கா 24: 45). அவரது சிலுவையின் பாடுகள், உயிர்த்தெழுதலின் மகிமையை  அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார் (லூக்கா 24: 25-27). 

வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் திருமுறையில் எழுதப்படவில்லை என யோவான் குறிப்பிட்டுள்ளார் (யோவான் 20:30).

கிறிஸ்தவ நம்பிக்கையின் ஆணிவேர்:

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் எனும் நம்பிக்கை திருச்சபையின் ஆணிவேர். ஒரு கிறிஸ்தவரின் விசுவாச வாழ்க்கை இதன் மீது தான் கட்டப்படுகிறது. திருத் தூதர் பவுல் ரோமருக்கு எழுதிய கடிதத்தில் இதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். 

இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே.  என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும்.(ரோமர் 10:8-10).
இதே கருத்தை கொரிந்தியருக்கு எழுதிய கடிதத்திலும் அவரால் வலியுறுத்தி எழுதப்பட்டுள்ளது. 

நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம்  ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்து விட்டனர். பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார்.  ல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார். (1 கொரிந்தியர்:15: 3-8).

இயேசு கிறிஸ்து மரித்து உயிரோடு எழவில்லை என்றால் திருச்சபை பேசுவதற்கு ஒன்றுமில்லை. 

உயிர்த்தெழுந்தார் என ஏன் சாட்சி சொல்ல வேண்டும் :

யூத மத தலைவர்கள் இயேசுவின் கல்லறையைக் காவல் காத்த படை வீரர்களுக்கு மிகுதியான பணத்தைக் கொடுத்து, "அவர்கள் உறங்கும் போது இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் அவருடைய உடலைத் திருடிச் சென்று விட்டனர்" எனச் சொல்லும்படி செய்தனர். அவர்களும் தங்களுக்குச் சொல்லிக் கொடுத்தவாறே செய்தார்கள் (மத்தேயு 28: 12-15).

இதை மறுக்க வேண்டியது  சீடர்களது கடமையானது. அவர் உயிர்த்தெழுந்தார், நாங்கள் அவரை தரிசித்தோம் என்பதைச் சீடர்கள் தைரியமாகச் சாட்சியாக அறிவித்தனர். 

அப் 1:22/ 2:32/ 3:15/ 5:50-32.

செயல்படும் விசுவாசம் :

விசுவாசம் செயலில் வெளிப்பட வேண்டும். இல்லையென்றால் அது பயனற்றது. தினமும் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது என நம்புகிறோம். அது நல்ல விஷயம் தான். ஆனால் உடற்பயிற்சி செய்யாமல் இருந்து கொண்டு வெறும் நம்பிக்கையுடன் இருப்பதால் என்ன பயன்?

முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் தங்களது நம்பிக்கையை வாழ்க்கையில் வெளிப்படுத்தினார்கள். அவர்கள் சிறந்த முறையில் சாட்சி பகிர்ந்தனர். 

இந்த நூலில் சாட்சி என்கிற வார்த்தை 29 முறை  வருகிறது. 

Dr. Oswald Smith  இவ்விதம் குறிப்பிடுகிறார். 

God's people are expected to be witness and tell the lost about the Savior. As Christians we should begin our witness at home and then extend it "into all nations". "The light that shines the farther will shine brightest at home"

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பதை அவர் காண்பித்த வழியில் வாழ்வதன் வழியாக அறிவிக்க வேண்டும். அது தான் உண்மையான சாட்சி. 

அவர் உயிருடன் இருப்பதை நம்பினால், அவர் எப்போதும் நம்முடன் இருக்கிறார் என்ற உணர்வு இருக்கும். அவரோடு அதிகமாக பேசுவோம். வாழ்க்கையின் துயரங்களை தைரியமாக சந்திக்கும் மன உறுதி கிடைக்கும். எந்த சூழ்நிலையிலும் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம். 

பிறரது முன்னிலையில் தமது நடவடிக்கைகளைக் கவனமாக நல்ல விதத்தில் வெளிப்படுத்த வேண்டும் என மனிதர்கள் விரும்புவார்கள். இது  ஆளுமைத் திறன் (Personality ). தன்னை யாரும் பார்க்காத சூழலிலும்  தமது நடவடிக்கைகளைக் கண்ணியமாக இருக்க வேண்டும் எனக் கவனமாக இருப்பது நற்பண்பு (Good Character).

உயிர்த்தெழுந்த ஆண்டவரை உறுதியாக நம்புபவர்கள் பண்பும், ஆளுமையும் எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் ஒரே விதமாகவே இருக்கும். 


No comments:

Post a Comment