ஆவியானவருக்காக
(The Church Waiting for the Holy Spirit)
(அப் 2:1)
We are not going to move this world by criticism of it nor conformity to it, but by the combustion with in it of lives ignited by the spirit of God. - Vance Havner.
இந்த உலகத்தின் செயல்பாடுகளை விமரிசனம் செய்வதன் வழியாக நாம் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. அல்லது அதன் செயல்பாடுகளுடன் கண்டும் காணாதது போல ஒத்திசைவாக வாழ்ந்து போகவும் விரும்பவில்லை. மாறாக உள்ளுணர்வில் தேவ ஆவியானவர் ஏற்றி வைத்த ஒளி காண்பிக்கும் வழியில் வாழ்வதன் மூலமாகவே இந்த உலகை மாற்றி அமைக்க விரும்புகிறோம்.
I. ஆவியானவர் அருளும் வல்லமை :
பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகளுக்கு அருளப்படுவதன் நோக்கம் அவர்கள் வல்லமையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். வேத வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து உண்மையாக வாழ வேண்டும். சாட்சியுள்ள வாழ்க்கையின் மூலமாக அநேக ஆத்துமாக்களை ஆண்டவருக்கு நேராக வழி நடத்த வேண்டும். கிறிஸ்துவின் பெயர் மாட்சிமை பெற வேண்டும். (அப் 1:8 /யோவான் 16 :14).
ஆதி திருச்சபையில் அது நடைபெற்றது.
இன்றைக்கு நாம் மதிப்பு மிக்கதென நினைக்கும் எந்த ஒரு விஷயமும் ஆதி திருச்சபையில் கிடையாது. திரள் கூட்டம் இல்லை. பிரமாண்டமான கட்டிடங்கள் கிடையாது. பணம் மற்றும் மதிப்புமிக்க அங்கத்தினர்கள் இல்லை.
மாறாக ரோம அரசு மற்றும் யூத சமய சங்கத்தின் கடும் எதிர்ப்பை எதிர் கொண்டார்கள். ஆனாலும், அனுதினமும் அநேக ஆத்துமாக்கள் சபையில் இணைந்தனர். பல தேசங்களில் புதிய சபைகள் நிறுவப்பட்டது. சபைகள் வளர்ந்து பெருகியது.
இவை எப்படிச் சாத்தியமானது என்பதை அப்போஸ்தல நடபடிகள் இரண்டாம் அதிகாரம் கற்றுத் தருகிறது
II. அப்போஸ்தல நடபடிகள் இரண்டாம் அதிகாரம் :
பெந்தக்கோஸ்து நாளில் நிகழ்ந்த சம்பவங்களைக் கீழ்க் கண்ட நான்கு தலைப்புகளில் தியானிப்போம்.
1. ஆவியானவருக்காகத் திருச்சபை காத்திருந்தது. (அப் 2:1 - The Church Waiting for the Holy Spirit).
2. திருச்சபை ஆவியில் நிறைந்து கர்த்தரை ஆராதனை செய்தது. (அப் 2: 2-13 - The Church Worshiping the Lord with the Holy Spirit).
3. திருச்சபை ஆவியானவர் அளித்த வல்லமையால் மீட்கப் பட வேண்டியவர்களுக்குச் சாட்சி பகர்ந்தது. ( அப் 2: 14-37 - The Church Witness to the Lost by the Holy Spirit).
4. திருச்சபை ஆவியானவரால் வழி நடத்தப்பட்டது. (அப் 2: 38-47 - The Church Walking with the Holy Spirit)
1.ஆவியானவருக்காகத் திருச்சபை காத்திருந்தது. (அப் 2:1 - The Church Waiting for the Holy Spirit).
பெந்தேகொஸ்தே நிகழ்வு தற்செயலாக நேர்ந்தது அல்ல. அது பிதாவினால் முன் குறிக்கப்பட்ட கால வரிசையில் நிகழ்ந்தது.
ஆதியாகமம் முதல் அதிகாரம் இரண்டாவது வசனம் துவங்கி ஆவியானவர் குறித்து ஏராளமான குறிப்புகள் வேதத்தில் உள்ளது.
தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார். (ஆதி 1:2).
பெந்தேகொஸ்தே நாளுக்கு முன்பாகவும் ஆவியானவர் தேவ மனிதர்கள் மீது இறங்கி வழி நடத்திய சம்பவங்கள் குறித்தும் ஏராளமான குறிப்புகள் உள்ளது.
அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன் மேல் இறங்கினார். (நியா 6:34).
அப்பொழுது சாமுவேல் : தைலக் கொம்பை எடுத்து அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம் பண்ணினான். அந்நாள் முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின் மேல் வந்து இறங்கியிருந்தார். (1 சாமுவேல் 16:13).
இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்திரத்துக்குக் கொண்டு போகப் பட்டு (லூக்கா 4:4)
அப்படியென்றால் பெந்தேகொஸ்தே நாளுக்கென என்ன சிறப்பு?
பெந்தேகொஸ்தே நாளுக்கு முன்னர் குறிப்பிட்ட தேவ மனிதர்களது மேல் மாத்திரம் ஆவியானவர் இறங்கினார். அவர்கள் தேவ சித்தத்தை நிறைவேற்றினார்கள்.
ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்னர் வந்த பெந்தேகொஸ்தே நாளுக்குப் பிறகு அவரை விசுவாசித்தவர்கள் அனைவர் மேலும் ஆவியானவர் இறங்கினார்.
ஆம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து இரட்சிக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஆவியானவரால் அபிஷேகம் செய்யப்பட்டார்கள்.
"கடைசி நாட்களில் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்" எனும் யோவேலின் தீர்க்க தரிசனம் நிறைவேறிய நாள் அது.
ஆகவே பெந்தேகொஸ்தே தினம் குறித்து நுட்பமாக ஆராய்ந்து தேவ சித்தத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.
1.1. பெந்தக்கோஸ்து - ஐம்பதாவது நாள் :
"பெந்தக்கோஸ்து"என்னும் சொல்லுக்கு ஐம்பதாவது நாள் என்பது பொருள். இது அறுவடைக்காக நன்றி செலுத்திக் கொண்டாடும் ஒரு திருவிழா.
இந்த ஐம்பதாவது நாள் எவ்விதம் கணக்கிடப்படுகிறது என முதலில் பார்ப்போம் (லேவி 23: 5-21).
யூதர்களுக்கு மிக முக்கியமான பண்டிகை பஸ்கா ஆகும். இது முதலாம் மாதம் பதினான்காம் தேதி மாலையில் துவங்கும்.
புளிப்பில்லா அப்பப் பண்டிகை ஏழு நாள்கள் ஆசரிக்கப்படும். இது பஸ்கா பண்டிகைக்கு மறுநாள் பதினைந்தாம் தேதி துவங்கும்.
பஸ்கா பண்டிகையைத் தொடர்ந்து வரும் ஓய்வு நாளுக்கு (சனிக்கிழமை) மறுதினம், அதாவது ஞாயிற்றுக்கிழமை அன்று வயலில் விளைந்த கதிர்களின் முதற் கட்டை தேவ சமூகத்தில் அசைவாடக் கர்த்தருக்கு நன்றி செலுத்துவார்கள். இது அசைவாடும் பண்டிகை.
அசைவாடும் பண்டிகையிலிருந்து ஏழு வாரங்கள் முடிந்த பிறகு வரும் மறுநாள் பெந்தேகொஸ்தே தினம் ஆகும். அன்றைய தினம் புதிதாக விளைந்த தானியங்களின் மெல்லிய மாவிலிருந்து இரண்டு அப்பங்களைச் செய்து தேவ சமூகத்தில் படைப்பார்கள்.
சுருக்கமாக வரிசை பட்டியலிட்டால் :
1. பஸ்கா - Pass Over - பெஷாக் - முதல் நாள்.
2. புளிப்பில்லா அப்பப் பண்டிகை - இரண்டாம் தினம்.
3. முதற் பலனாகிய கதிர்களோடு அசைவாடும் பண்டிகை - Feast of First Fruits - (Feast of Waiving) - மூன்றாம் நாள்.
4. பெந்தேகொஸ்தே பண்டிகை - Pentecost - ஷவ்யாத் - அசைவாடும் பண்டிகையிலிருந்து ஏழு வாரங்களுக்குப் பிறகு வரும் ஓய்வு நாளுக்கு மறுதினம்.
1.1.a. பஸ்கா பண்டிகை மீட்பின் அடையாளம் :
பஸ்கா என்பது கர்த்தர் நீதியை நிலை நிறுத்திய தினம். (யாத்திராகமம் 12: 1-50).
யூதர்கள் 430 வருடங்கள் எகிப்தில் அடிமைகளாக இருப்பார்கள் என்பது தீர்க்க தரிசனம். அவ்வாறே அது நிகழ்ந்தது. அந்த நானூற்று முப்பது வருடங்கள் முடிந்த அன்றைய தினமே எகிப்திலிருந்து அவர்கள் கானான் தேசம் நோக்கி தங்களது விடுதலை பயணத்தைத் துவங்கினார்கள். அந்த புறப்பட்ட நாளின் மாலையில் ஆசரித்த பண்டிகை தான் பஸ்கா.
கர்த்தர் விடுவித்ததை நினைவு கூறும் விதமாக நித்திய காலமும் பஸ்கா பண்டிகை ஆசரிக்கப்பட வேண்டும் எனும் கட்டளை அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.
பஸ்கா ஆசரிக்கப்பட வேண்டிய விதமாவது: ஒவ்வொரு குடும்பமும் முதல் மாதம் பத்தாம் நாளில் ஒரு ஆட்டுக் குட்டியைத் தெரிவு செய்து கொள்ள வேண்டும். அது பழுதற்ற ஒரு வயது ஆண் குட்டியாக இருக்க வேண்டும். பின்பு நான்கு தினங்கள் அவர்கள் காத்திருக்க வேண்டும். அதைத் தொடர்ந்து பதினான்காம் தேதியன்று பஸ்கா ஆசரிக்கப்பட வேண்டும்.
பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்து அதன் இரத்தத்தை வீட்டின் நிலைக் கால்களில் பூசுவார்கள். ஏனெனில் அவர்கள் விடுதலையான இரவில் கர்த்தரின் தூதர் நீதியைச் செலுத்தக் கடந்து வந்த போது, நிலை வாசல்களில் இரத்தம் பூசப்படாத வீடுகளில் வசித்தவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டனர்.
கர்த்தருடையவர்கள் வசிக்கும் வீடு என்பதற்கு இரத்தம் பூசப்படுதல் அடையாளமாக இருந்தது. இரத்தம் அவர்கள் அழிக்கப்படாதவாறு பாதுகாத்தது
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை குறித்து யோவான் ஸ்நானகன் இவ்விதமாகக் கூறினார் :
"இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டி". (யோவான் 1:29)
ஆம், பஸ்கா பண்டிகையில் அடிக்கப்படும் ஆட்டுக்குட்டியைப் போல, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் நமது பாவங்களுக்காக இரத்தம் சிந்தினார். அவரது இரத்தம் கர்த்தருக்கு முன் நீதியாக இருக்கிறது. அந்த இரத்தத்தால் கழுவப்படும் போது, அது சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)
நமது பாவங்களின் அடிமைத்தனத்திலிருந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் மீட்கப்படுவதற்கு அடையாளமாக பஸ்கா பண்டிகை இருக்கிறது.
1.1.b. அசைவாடும் பண்டிகை உயிர்த்தெழுதலின் அடையாளம்:
பஸ்காவை தொடர்ந்து வரும் மூன்றாவது நாள் அசைவாடும் பண்டிகை ஆசரிக்கப்படும். அந்த நாளில் நிலத்தில் விளைந்த முதற் பலனாகிய கதிர்களைக் கொய்து, அந்த கதிர் கட்டை தேவ சமூகத்தில் படைப்பது அசைவாடும் பண்டிகை. (லேவி 23:11).
இது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்த நிகழ்வுக்கு முன்னடையாளமாக இருக்கிறது. அவர் உயிர்த்தெழுந்து முதற் பலனாக வெளிப்பட்டார்.
திருத் தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் கடிதத்தில் இவ்விதம் எழுதியுள்ளார்.
கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து எழுந்து நித்திரையடைந்தவர்களது முதற் பலனானர் (1 கொரி 15:20).
முதற்பலனாக வெளிப்பட்டவர் பிதாவின் வலதுபுறம் மகிமையாகத் தேவ சமூகத்தில் அமர்ந்திருக்கிறார்.
1.1.c. பெந்தக்கோஸ்து பண்டிகை ஆவியானவர் அருளப்படுதலுக்கு அடையாளம் :
பெந்தக்கோஸ்து அன்று புதிதாக விளைந்த தானியத்திலிருந்து மெல்லிய மாவு தயாரிக்கப்படும். அந்த புதிய மாவில் சமைக்கப்பட்ட இரண்டு அப்பங்கள் தேவ சமூகத்தில் படைக்கப்படும். (லேவி 23:17).
ஆண்டவர், "நானே இந்த உலகத்திற்கு அருளப்பட்ட ஜீவ அப்பம்" என்றார். (யோவான் 6:31-35/48-58).
சிலுவை மரணத்திற்கு முன்பாக அவர் ஒரு அப்பத்தை எடுத்து அதைப் பிட்டு சீடர்களுக்கு உண்பதற்குக் கொடுத்தார். " இது உங்களுக்காகப் பிய்க்கப்படும் எனது சரீரம்" என்றார். (லூக்கா 22:19).
ஆவியானவர் குறித்து இயேசு கிறிஸ்து உபதேசித்த சில வசனங்களைத் தியானிப்போம்.
இயேசு எழுந்து நின்று உரத்த குரலில், "யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும்; என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும். மறைநூல் கூறுவது போல் அவருடைய உள்ளத்திலிருந்து வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்" என்றார். தம்மிடம் நம்பிக்கை கொண்டிருப்போர் பெறப்போகும் தூய ஆவியைக் குறித்தே அவர் இவ்வாறு சொன்னார். தூய ஆவி இன்னும் அருளப்படவில்லை. ஏனெனில் இயேசு மாட்சிப் படுத்தப்படவில்லை. (யோவான் 7:37-39).
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகவிட்டால் ஆவியானவர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன். (யோவான் 16 :7).
இந்த வசனங்கள் ஆண்டவர் சிலுவையில் மரிக்க வேண்டும். மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும். அவர் மாட்சிமை அடைய வேண்டும். அவர் பிதாவின் வலதுபுறம் அமர வேண்டும். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் இந்த உலகிற்கு வருவார் என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றன.
1.1.d. காத்திருக்க வேண்டும் :
அவ்விதமாகவே தமது உயிர்த்தெழுதல் பின்னர் அவர் சீடர்களுக்குத் தரிசனமானார். பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மீது வந்து இறங்குவார் எனும் வாக்குறுதியை நினைவு படுத்தினார். அந்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ள எருசலேமில் காத்திருக்கும் படி கட்டளையிட்டார். (அப் 1:3-5).
சபையார் அவரது வார்த்தைக்கு கீழ்ப்படிந்து தேவ சமூகத்தில் ஆவியானவருக்காகக் காத்திருந்தனர். பெந்தேகொஸ்தே நாள் வந்தது. அன்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தவர்கள் அனைவர் மேலும் ஆவியானவர் இறங்கினார்.
ஆவியானவரால் அபிஷேகம் செய்யப்பட்ட திருச்சபை செய்த பணிகளைத் தொடர்ந்து தியானிப்போம். ஆமென்.