Monday, 27 September 2021

ஆதித் திருச்சபை விசுவாசிகளின் நம்பிக்கைகள் - 3

அவர்கள் இறைவனின் ஐக்கியத்தை நம்பினர்  

(They Believed in the Fellowship of The Lord -  Acts 1:12)


ஆதித் திருச்சபை விசுவாசிகள் தேவ ஐக்கியத்தை மிக மேன்மையாகக் கருதினார்கள். 

தேவ பிரசன்னம் மகிழ்ச்சியைத்  தருகிறது: 

ஒலிவமலையிலிருந்து சீடர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் எருசலேமுக்கு திரும்பினார்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சரீரப் பிரகாரமாக  அவர்களுடன் இருக்கவில்லை. ஆனாலும் அவர் பிரசன்னம் தங்களுடன் இருக்கிறது என அவர்கள் முழு உள்ளத்துடன் நம்பினார்கள். இந்த நம்பிக்கையால் அவர்கள் உள்ளம் மிகு‌ந்த சந்தோஷத்தினால் நிறைந்து வழிந்தது. (லூக்கா 24:52).  

ஆண்டவரது பிரசன்னம் நம்முடன் இருந்தால் நமது வாழ்க்கையில்  மகிழ்ச்சி இருக்கும். 

தேவ பிரசன்னம் தைரியம் அளிக்கிறது: 

ஆண்டவர் கைது செய்யப்பட்ட போது யூதர்களுக்குப் பயந்ததால் சீடர்கள் அவரைத் தனியாக விட்டுவிட்டு ஓடி ஒளிந்து கொண்டார்கள். தங்கள் அறையைப் பூட்டிக் கொண்டு திகிலுடன் வாழ்ந்தார்கள். 

பின்னர் உயிர்த்தெழுந்த ஆண்டவரை அவர்கள் தரிசித்தனர். அவரது பிரசன்னம் தங்களுடன் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டனர். அந்த நம்பிக்கை அவர்களுக்குள் ஒரு மாற்றத்தை  ஏற்படுத்தியது. அதன் பிறகு அவர்கள் அனுதினமும் தைரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் எருசலேம் தேவாலயத்தில் தேவனைத் துதித்துப் புகழ்ந்து  தொழுது கொண்டார்கள். (லூக்கா 24 : 53).  

தேவ பிரசன்னம் மனநிறைவு அளிக்கிறது: 

கெத்சமனே தோட்டத்தில் ஆண்டவர் தமது சீடர்களைப் பார்த்துக் கேட்ட கேள்வி மிக முக்கியமானது. 

"நான் உங்களைப் பணப்பையோ, பொருட்கள் வைக்கும் பையோ, மிதியடியோ எதுவுமில்லாமல் அனுப்பியபோது, உங்களுக்கு ஏதாவது குறை இருந்ததா?" என்று கேட்டார். சீடர்கள், "ஒரு குறையும் இருந்ததில்லை" என்றார்கள். (லூக்கா 22:35).

இதிலிருந்து நாம் கற்றுக் கொள்வது பணம், பொருட்கள், மதிப்பு இவற்றைக் காட்டிலும் ஆண்டவருடன் இணைந்து வாழும்  வாழ்க்கை மன நிறைவைத் ரும். 

தேவ மனிதர் மோசே இந்த உண்மையை நன்கு அறிந்திருந்தார். ஆகவே தான் அவர் ஆண்டவரிடம் இப்படிச் சொன்னார். 

"உமது பிரசன்னம் கூடவரவில்லையெனில் எங்களை இங்கிருந்து போகச்செய்யாதீர்`. (யாத்திராகமம் 33:15). 

தேவ பிரசன்னம் என்பது சமாதானம். 

ஆண்டவர் உயிர்த்தெழுந்த பின்னர் சீடர்களைச் சந்தித்தவுடன் சொன்ன முதல் வார்த்தை சமாதானம். அவர்களைப் பார்த்துப் பயப்படாதிருங்கள் என்றார். அவர் பிரசன்னம் மன அமைதி தருகிறது. மன கொந்தளிப்பு அடங்குகிறது. 

என்னுடைய சமாதானத்தையே நான் உங்களுக்குத் தருகிறேன் என அவர் வாக்குறுதி அளித்தார். அவர் சமாதானக் காரராகிய கர்த்தர்.  

திருத் தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய கடிதத்தில், 

கனிந்த உங்கள் உள்ளம் எல்லா மனிதருக்கும் தெரிந்திருக்கட்டும். ஆண்டவர் அண்மையில் உள்ளார். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். 

ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். 

அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த தேவ சமாதானம் கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும். (பிலி 4: 5-7).

தற்பரிசோதனை: 

நம் வாழ்வில் எல்லாவற்றையும் விட ஆண்டவரது பிரசன்னம் தான் மிக முக்கியமானது என நம்புகிறோமா? தற்பரிசோதனைக்காக ஒரு சில கேள்விகள்:

1. நமது வாழ்வில் இரண்டு சம்பவங்கள் நிகழ்வதாக வைத்துக் கொள்வோம்.  பணம் பத்தாயிரம் ரூபாய் தொலைந்து விட்டது. ஒரு வார ஆராதனையில் கலந்து கொள்ள முடியாமல் போகிறது. இதில் எந்த நிகழ்வு நம் மனதில் அதிக கவலையை ஏற்படுத்தும்? எதை நினைத்து அதிகமாகத் தவித்துப் போகிறோம்?  

2. ஒரு ஆராதனையில் கலந்து கொள்ள வேண்டும். அதே நாளில் மாலையில் சொந்த ஊருக்குப் போக வேண்டும். ஊருக்குப் சில பொருட்கள் வாங்கி உடன் எடுத்துச் செல்ல வேண்டும். எது முக்கியம்? எங்குச் செல்லத் திட்டமிடுகிறோம்? 

3. காலையில் எழுந்தவுடன் எந்த செயலை செய்வதற்கு மிகுந்த ஆர்வம் வருகிறது? What's app, face book, Instagram, emails, TV news  பார்ப்பது அல்லது Bible reading? எது அதிக மன மகிழ்ச்சியை அளிக்கிறது? 

4. ஒரு TV serial, shows, games அல்லது Bible reading  இவற்றில் எதில் ஈடுபடும் போது நேரம் போவதே தெரிவதில்லை? 

5. நமது ஜெப நேரம், பொழுது போக்கிற்குச் செலவிடும் நேரம் இவற்றுள் எதற்காக அதிக நேரம் செலவிடுகிறோம்? 

இந்த கேள்விகளுக்கான பதில்கள் நாம் எதை அதிகமாக நேசிக்கின்றோம் என்பதை வெளிப்படுத்தும். 

தேவ பிரசன்னம் நிறைந்த மக்கள் செய்ய விரும்பும் செயல்கள் என வேதம் கூறுபவை:

1. ஆண்டவரைப் பணிந்து தொழுகை செய்தல் (Praying in obedience), 

2. அவரை புகழ்ந்து, போற்றி, நன்றியுடன் துதித்து ஆராதனை செய்தல் ( Praise and Worship with gratitude), 

3. வேதத்தைக் கிரமமாகத் தியானிப்பது (Regular Bible Meditation), 

4. ஜெப விண்ணப்பத்துடன் தேவ சமூகத்தில் காத்திருப்பது (Sincere Prayer) 

5. ஆண்டவருடைய பிள்ளைகள் ஐக்கியத்தை விரும்புதல் (Believers Fellowship) . 

தேவ பிரசன்னத்தில் வாழ்ந்த தேவ மனிதர்கள் கூறிய வசனங்கள்: 

நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். (சங்கீதம் 27:4).

மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து பவனியாகக் கடவுளின் இல்லத்திற்குச் சென்றேனே! ஆர்ப்பரிப்பும் நன்றிப்பாடல்களும முழங்க விழாக்கூட்டத்தில் நடந்தேனே! இவற்றையெல்லாம் நான் நினைக்கும்போது, என் உள்ளம் வெகுவாய் வெதும்புகின்றது. (சங்கீதம் 42:4). 

ஆகவே யோர்தான் நிலப்பகுதியிலும், எர்மோன், மீசார் மலைப்பகுதிகளிலுமிருந்து உம்மை  நினைக்கிறேன். (சங்கீதம் 42:6).

பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவதுபோல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன்.(சங்கீதம் 119:14).  

ஏனெனில், உம் ஒழுங்குமுறைகள் எனக்கு இன்பம் தருகின்றன; அவையே எனக்கு அறிவுரையாளர்.(சங்கீதம் 119:35).

 உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை! என் வாய்க்குத் தேனினும் இனிமையானவை.(சங்கீதம் 119:103).

உம் ஒழுங்குமறைகளை என்றும் என் உரிமைச் சொத்தாய்க் கொண்டுள்ளேன். ஆகவே, அவை என் இதயத்தை மகிழ்விக்கின்றன.(சங்கீதம் 119: 111).

உம் விதிமுறைகளைச் செயல்படுத்துவதில் என் உள்ளம், என்றென்றும், இறுதிவரை நாட்டம் கொண்டிருக்கும். (சங்கீதம் 119:112). 

ஆகவே, பொன்னிலும் பசும்பொன்னிலும் மேலாக உம் கட்டளைகளை விரும்புகின்றேன். (சங்கீதம் 119:127). 

திரண்ட கொள்ளைப் பொருளை அடைந்தவன் மகிழ்வது போல உமது வாக்குறுதியில் நான் மகிழ்ச்சியுறுகின்றேன்; (சங்கீதம் 119: 162).  

"கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள்", என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். (சங்கீதம் 122:1 ). 

விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, ஆம்;, விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் ஆண்டவருக்காக ஆவலுடன் காத்திருக்கின்றது. (சங்கீதம் 130: 6). 

ஆகவே தான் திருத் தூதர் யோவான் தமது முதலாம் திருமுகத்தில் இவ்விதம் எழுதியுள்ளார். 

நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.  (1 யோவான் 1:3). 

We Proclaim To You What We Have Seen And Heard, So That You Also May Have Fellowship With Us. And Our Fellowship Is With The Father And With His Son, Jesus Christ.

ஆண்டவருடைய திருப் பிரசன்னத்தில் தரித்திருப்பதை விட மேலான ஆசிர்வாதம் வேறு எதுவும் இந்த உலகில் இல்லை. ஆமென். 

Sunday, 19 September 2021

ஆதித் திருச்சபை விசுவாசிகளின் நம்பிக்கைகள் - 2

 கிறிஸ்துவின் இரண்டாம் வருகை. 

( They Believed in His Assurance of Second Coming.) 



உலகில் ஜப்பான் தேசத்தில் தான் வயது முதிர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 29% மக்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். 

ஹெக்டர் கார்ஸியா (Hector Garcia) மற்றும் ஃப்ரான்செஸ்க் மிராஷெஸ் (Francesc Miralles) இருவரும் சிறந்த நண்பர்கள். அவர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். 

அந்த ஆய்வின் நோக்கம் நீண்ட ஆயுளுடன் மன மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உதவும் வழி முறைகளைக் கண்டு பிடித்துத் தொகுப்பது ஆகும் (The Japanese Secret to a Long and Happy Life).

அவர்கள் Okinawa எனும் தீவில் வாழும் மக்களிடையே அந்த ஆய்வை மேற் கொண்டனர். ஏனெனில் அங்கு தான் அதிக முதிர் வயதான மக்கள் வாழ்ந்தனர். 

இதற்காக நூறு வயது கடந்த பலரிடம் நேர்காணல் நடத்தினர். அவர்களது உணவுப் பழக்கம், வேலை மீதான விருப்பம், அதைச் செய்த முறை, உடற்பயிற்சி, மனித உறவுகள் இப்படிப் பல கேள்விகளைக் கேட்டு அதற்கான விடையைத் தொகுத்தனர். 

அந்த விடைகளிலிருந்து மன மகிழ்ச்சியுடன் வாழ்ந்த முதியோரிடம் காணப்பட்ட பொதுவான ஒற்றுமை விடயங்களை வரிசைப் படுத்திப் பட்டியலிட்டனர். 

அவற்றுள் முக்கியமானது, "இந்த முதிர் வயதிலும் தாங்கள் வாழ்வதற்கு ஒரு காரணம் அல்லது ஒரு நோக்கம் இருக்கிறது" என அவர்கள் நம்பினார்கள்.  

இந்த குறிப்பையே தங்களது புத்தகத்தின் தலைப்பாக (IKIGAI) சூட்டினார்கள். "இக்கிகய்" என்கிற ஜப்பானிய வார்த்தையின் அர்த்தம் "நோக்கம்" அல்லது "காரணம்" ஆகும். 

இந்தக் குறிப்பு அற்புதமானது. உண்மையானது. வாழ்வில் கட்டாயம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். 

அப்படியென்றால் "ஒரு கிறிஸ்தவரின் வாழ்க்கையில் எது நோக்கமாக இருக்க வேண்டும்?" 

இயேசு கிறிஸ்து சீடர்களோடு மூன்றரை ஆண்டுகள் உடனிருந்தார். அப்போது சீடர்கள் கவலையின்றி வாழ்ந்தனர். இப்போது அவர் அவர்களுடனே இல்லை. சீடர்கள் வானத்தை அண்ணாந்து வெறித்துப் பார்த்தபடி கலங்கி நின்றனர். (அப் 1:10)

இந்த சமயத்தில் தேவ தூதர்கள் சொல்லிய தீர்க்க தரிசன வார்த்தைகள் அவர்களுக்கு வாழ வேண்டிய நோக்கம் குறித்த தெளிவைத் தந்தது. 

தேவ தூதர்கள் சொன்ன அந்த வார்த்தை, "அவர் மறுபடியும் வருவார்" (மாரநாதா)

"ஆண்டவர் மீண்டும் வருவார்" என்ற தரிசன வாக்கு வாழ்க்கைக்கு புதிய அர்த்தத்தை அளிக்கிறது. ஆதித் திருச்சபையின் விசுவாசிகள் அந்த தீர்க்க தரிசன வாக்கை முழுவதும் நம்பினார்கள். 

ஆண்டவரை மீண்டும் சந்திப்போம் என்பதே அவர்களின் வாழ்க்கை நோக்கமாக இருந்தது. அதனால் அவர்கள் வெற்றி சிறந்த வாழ்க்கை வாழ்ந்தனர். அது அநேகருக்கு ஆசீர்வாதமாக அமைந்தது. 

இன்றைய நிஜ உலகத்தில், யதார்த்த வாழ்வினில் நாம் பல மன அழுத்தங்களைச் சந்திக்கிறோம். அவை நம்மைச் சோர்வடையச் செய்கிறது.  அப்போது என்ன வாழ்க்கை இது? எனச் சலிப்புடன் சொல்வதுண்டு. 

ஆனால் இந்த தரிசன வாக்கை நினைவு கூற வேண்டும். அது "ஏன் வாழ வேண்டும்" என்கிற காரணத்தைக் கூறி மனதில் நம்பிக்கையை விதைக்கிறது. 

ஒரு தேவனுடைய பிள்ளையின் வாழ்க்கையில் எது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்பதைக் கற்றுத் தருகிறது.

"ஆண்டவர் மறுபடியும் வருவார். அவர் எந்த நேரத்தில் வந்தாலும் அவரை மகிழ்வோடு எதிர் கொள்ளும் படி நான் வாழ வேண்டும்." என்பதைத் தனது வாழ்வின் நோக்கமாகத் தீர்மானிக்க வேண்டும்.

ஒருவர் இந்த தீர்மானத்தை மிகு‌ந்த ஆர்வமுடன், ஈடுபாட்டுடன் ஏற்றுக் கொண்டு, அந்த இலக்கை அடைய வேண்டும் என்கிற நோக்கில் செயல் ஆற்ற வேண்டும். அப்போது அவரது வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும். மனநிறைவு அடைவர். ஒவ்வொரு நாளும் பயனுள்ள வகையில் அமையும். 

அப்படிப்பட்ட ஒரு அர்ப்பணிப்பு நிறைந்த வாழ்க்கையை வாழும் படி ஆண்டவர் எதிர்பார்க்கிறார். 

வேத வாக்கியத்தில் எழுதப்பட்டுள்ள இந்த வசனம் நம்மை உற்சாகப்படுத்தும்.

"நல்லது உண்மையும் உத்தமும் உள்ள பணியாளரே, சிறிய பொறுப்புகளிலும் கூட நீ நம்பிக்கைக்குரியவராக இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளிலும் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என்னுடைய மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்." 

"Well done, good and trust worthy slave, you have been trust worthy in few things, I will put you in charge of many things ; enter into the joy of your Master." 

St. Mathew 25:21

இத்துடன் இதற்குத் தொடர்புடைய இரண்டு வேத பகுதிகளை உங்கள் தனிப்பட்ட தியானத்திற்குக் குறிப்பிட விரும்புகிறேன். 

1. யோவான் 16: 16-22. (ஆண்டவரை மறுபடியும் பார்ப்போம். அப்போது நமது துக்கம் சந்தோஷமாக மாறும்). 

2. லூக்கா 12: 22-40. (நாம் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார். ஆகையால் எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டும்).

அத்துடன் ஆண்டவரது இரண்டாம் வருகையில் நிகழ்பவை குறித்துப் பல தீர்க்க தரிசன வார்த்தைகள் வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. 

பின் வரும் ஏழு தலைப்புகளில் அவற்றைத் தியானிப்பது இரண்டாம் வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்தும். விசுவாசம் வளர்ச்சி அடைய உதவும்.

1. தேவனுடைய ராஜ்யம் 

2. கடைசி நாட்களில் நிகழ விருக்கும் சம்பவங்கள். 

3. சபை எடுத்துக் கொள்ளப்படுதல். 

4. அந்திக் கிறிஸ்து ஆளுகை - உபத்திரவமான காலங்கள். 

5. கிறிஸ்து மகிமையாகத் திரும்புதல். 

6. முதலாம் உயிர்த்தெழுதல் - ஆயிரம் வருட ஆட்சி. 

7. இறுதி நியாயத்தீர்ப்பு - புதிய வானம் புதிய பூமி.

கர்த்தர் இவ்விதமான நோக்கம் நிறைந்த, அர்ப்பணிப்புடைய வாழ்க்கை வாழ்வதற்கு நம்மைத் தகுதி செய்வாராக. மாரநாதா. ஆமென்.


அதிகாரம் (1: 10 -11) : தேவ தூதர்கள் வழி நடத்துதல்.

தரிசனங்கள் ஏன் அருளப்படுகின்றன?



தேவ தூதர்கள்:

தேவ தூதர்கள் வழி நடத்துதல் எதற்காகக் கொடுக்கப் படுகிறது? 

தரிசனங்கள் எதற்காக அருளப்படுகின்றன? 

இவற்றை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் தவறான உபதேசங்களில் விழுந்து விடாமல் தடுக்கப்படுவதுடன் அதிலிருந்து விலகி வாழ்வதற்கும் கற்றுக் கொள்ள முடியும். 

"தேவ மக்களுக்கு உதவி செய்திடும் பணிவிடை ஆவிகள்" எனத் தேவ தூதர்களைக் குறித்து வேதம் கூறுகிறது (எபிரேயர் 1:14). 

தேவ தூதர்கள் இறை மக்களை வழி நடத்திச் செல்லும் பல அற்புதமான நிகழ்வுகள் "அப்போஸ்தல நடபடிகள்" நூலில் எழுதப்பட்டுள்ளது. 

தேவ தூதர்கள் வழிநடத்திய சில சம்பவங்கள் :

1. ஆண்டவரது இரண்டாம் வருகையை முன்னறிவித்தனர் (1:11).

2. பேதுருவும், யோவானும் ஜீவ வார்த்தையை அறிவிக்கும்படி விடுதலை செய்யப்பட்டார்கள் (5:19-20).

3. பிலிப்பு  எத்தியோப்பியா மந்திரியிடம் நற்செய்தி அறிவிக்க வழி நடத்தப்பட்டார் (8:26).

4. கொர்நேலியுவிற்கு உண்மையான இறை வழி காட்டுதல் அருளினார் (10:3-6).

5. பேதுரு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் (12:7-11). 

6. ஏரோதுவிற்கு தண்டனை அளிக்கப்பட்டது (12:21-23).

7. பவுலுடன் கப்பற்பயணம் செய்தவர்களின் மரண பயம் நீங்கி ஆறுதல் அடைந்தனர் (27:22-24). 

தரிசனங்கள்:

அது போலச் சீடர்கள் தரிசனங்கள் வழியாகவும் வழி நடத்தப்பட்டனர். 

1. திருத் தூதர் பவுல் பார்வை அடையும் படி ஜெபிப்பதற்குச் சீடர் அனன்யாவுக்கு  தரிசனத்தின் மூலம் உத்தரவு தரப்பட்டது (9:10-11).

2. திருத் தூதர் பவுல் தான் மீண்டும் பார்வை அடைவதற்கு அனன்யா என்பவர் வருவார் எனும் தரிசனம் அருளப்பட்ட.து (9: 12).

3. புற இனத்தைச் சேர்ந்தவர்களும் திருச்சபையில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி திருத் தூதர் பேதுருவிற்கு மூன்று முறை தரிசனத்தின் மூலமாகச் சொல்லப்பட்டது (10: 10-16).

4. மக்கெதோனியா மக்களுக்கு நற்செய்தி அறிவிக்க வேண்டும் எனத் திருத் தூதர் பவுல் தரிசனம் பெற்றார் (16:9).

5. திருத் தூதர் பவுல் கொரிந்தியருக்கு தேவ பணியைத் தொடர்ந்து செய்யும்படி தரிசனம் அருளப்பட்ட.து (18:10).

6. திருத் தூதர் பவுல் எருசலேமில் சாட்சி பகிர்ந்ததைப் போல ரோம் நகரத்திலும் சாட்சி கொடுக்க வேண்டும் எனத் தரிசனத்தின் வழியாகச் சொல்லப்பட்டது (23:11).

இந்த சம்பவங்கள் நமக்கு எதைக் கற்றுத் தருகிறது? தேவ தூதர்கள் வழி நடத்துதல் எதற்காகக் கொடுக்கப் படுகிறது? தரிசனங்கள் ஏன் அருளப்படுகின்றன? 

இந்த நிகழ்வுகளை ஒரு முத்து மணி மாலையாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு நிகழ்வும் ஒரு முத்து மணி. கோர்க்கப்பட்ட  முத்துச்சரத்தை உற்றுக் கவனமாகக் கவனித்தால் ஒரு மெல்லிய நூலிழை புலப்படும். அந்த மெல்லிழை நூல் தான் தரிசனத்தின் நோக்கம். 

நாம் கண்டு கொண்ட  நோக்கங்களை மனதில் பதித்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம். 

1. வேத வாக்கியத்தில் எழுதப்பட்டுள்ள தரிசனத்தின் நிறைவேறுதலின் படி இவை அருளப்படுகின்றன. இரட்சிப்பு எல்லா மக்களுக்கும் உரியது. இது இறைவனது திட்டம்.  

2. இறை மக்கள் விசுவாசத்தில் உறுதிப்படுவதற்கு இவையெல்லாம் உதவி செய்கிறது. தரிசனம் விசுவாசத்தை வளர்ச்சி அடையச் செய்யும். 

3. இந்த நிகழ்வுகள் மக்களிடம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தத் தூண்டும் சாட்சியாகச் செயல்பட்டது. தரிசனம் மாற்றத்தை ஏற்படுத்தும். 

4. அநேக மக்கள் இரட்சிக்கப்பட்டார்கள். தரிசனம் இரட்சிப்புக்கு நேராக வழி நடத்தும். 

5. சபைகளின் விசுவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. தரிசனம் எண்ணிக்கை வளர்ச்சியை அளிக்கும். 

6.  நற்செய்தி பல புதிய பகுதியில் அறிவிக்கப்பட்டது. தரிசனம் எல்லைகளை விரிவாக்கும். 

7. இயேசு கிறிஸ்துவின் நாமம் அதனால் மகிமை அடைந்தது. தேவ தூதர்கள் வழி நடத்துதல் மற்றும் தரிசனங்கள் நிறைவேறும் போது விசுவாசிகள் துதித்துப் பாடி தேவனை மகிமைப் படுத்தித் தொழுது கொள்வார்கள்.

இவற்றைத் தெளிவாகப் புரிந்து கொள்வது நல்லது. அதனால் பல கள்ள உபதேசங்களிலிருந்து தப்பிக்க முடியும். ஏனெனில் கடைசிக் காலத்தில் பல போலியான தீர்க்கதரிசிகள் தோன்றுவார்கள். அவர்கள் நன்கு கற்றுத் தேர்ந்த தேவ பிள்ளைகளையும் கூட வஞ்சகமாக ஏமாற்றி விடுவார்கள் என வேதம் எச்சரிக்கின்றது. 

ரிக் வாரன் எனும் தேவ ஊழியர் இவ்விதம் குறிப்பிடுகிறார். 

இவ்வுலக வாழ்வில் செழிப்பு, வெற்றி, ஆளுகை ஆகியவற்றை வாழ்வில் அடைந்து சிறந்தோரைத் தேவன் விசுவாச வீரர்களாகப் பார்ப்பதில்லை. மாறாக வாழ்க்கையைத் தற்காலிகமானதாகக் கருதி, உண்மையாய் உழைத்து தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட பரிசாகிய நித்திய வாழ்வை எதிர்பார்த்து வாழ்பவர்களையே தேவன் விசுவாச வீரர்களாகக் காண்கிறார்.

தரிசனம் தேவனுடைய ராஜ்யத்திற்கு நேராக நம்மை வழிநடத்த வேண்டும். ஆமென். 

Sunday, 12 September 2021

அதிகாரம் 1: முதல் தலைமுறை கிறிஸ்தவர்களின் விசுவாசம்

நம்பிக்கைகள்.



பொற்காலம்: 

திருச்சபை வரலாற்றில் முதல் மூன்று நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் மிக மிக உயர்வான ஆவிக்குரிய நிலையில் செயல் பட்டு வந்தனர். அது போன்றதொரு உயர்ந்த வாழ்க்கை வேறு எந்த காலகட்டத்திலும் இருந்ததில்லை. 

அவர்கள் பரிசுத்த ஆவியானவரை முழு மனதுடன் பின்பற்றி அர்ப்பணிப்பு உணர்வுடனும் வாழ்ந்தனர். அவர்களது நோக்கமெல்லாம் இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமைப் படுத்தப் பட வேண்டும் என்று இருந்தது. இது ஆவியானவர் செயல் புரிகிறார் என்பதற்கு ஓர் சான்று. 

அவர்களிடம் காணப்பட்ட ஆறு முக்கிய நம்பிக்கைகளை முதல் அதிகாரத்தில் பார்க்கலாம். அவை நாம் பின்பற்ற வேண்டிய நல்லதொரு வழிகாட்டியாக இருக்கிறது. 

ஆறு முக்கிய நம்பிக்கைகள்:

1. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஆண்டவர் என நம்பினார்கள். 

(They Believed in the Risen Christ - 1:3)

2. கிறிஸ்துவின் இரண்டாவது வருகையை நம்பினார்கள். 

(They Believed in the  Assurance of His Coming Again - 1: 9-11)

3. ஆண்டவரது ஐக்கியத்தை நம்பினார்கள். 

(They Believed in the Fellowship with the Lord - 1: 12-14)

4. விசுவாசிகளது ஐக்கியத்தை நம்பினார்கள். 

(They Believed in the Fellowship of Each Other - 1: 12-14)

5.  ஜெபத்தின் வல்லமையை நம்பினார்கள். 

(They Believed in Prayer - 1:14/24-25)

6. கடவுளின் வழிநடத்துதலை நம்பினார்கள். 

( They Believed in God's leading - 1:15-23).


1. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஆண்டவர் என நம்பினார்கள். 

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்னர் 40 நாட்கள் சீடர்களுடன் இருந்தார். அவர் ஏறக்குறைய 500 நபர்களுக்குத் தரிசனம் தந்தார் என வேதம் சொல்கிறது. 

எனினும் அவர் உயிர்த்தெழுந்தார் என்பதை முதலில் கேள்விப்பட்ட போது அதைச் சீடர்கள்  நம்பவில்லை (மாற்கு 16:11-14). 

அவர் அவர்கள் கண்களைத் திறந்தார் (லூக்கா 24: 31). மனதைத் திறந்தார் (லூக்கா 24: 45). அவரது சிலுவையின் பாடுகள், உயிர்த்தெழுதலின் மகிமையை  அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார் (லூக்கா 24: 25-27). 

வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் திருமுறையில் எழுதப்படவில்லை என யோவான் குறிப்பிட்டுள்ளார் (யோவான் 20:30).

கிறிஸ்தவ நம்பிக்கையின் ஆணிவேர்:

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் எனும் நம்பிக்கை திருச்சபையின் ஆணிவேர். ஒரு கிறிஸ்தவரின் விசுவாச வாழ்க்கை இதன் மீது தான் கட்டப்படுகிறது. திருத் தூதர் பவுல் ரோமருக்கு எழுதிய கடிதத்தில் இதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். 

இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே.  என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும்.(ரோமர் 10:8-10).
இதே கருத்தை கொரிந்தியருக்கு எழுதிய கடிதத்திலும் அவரால் வலியுறுத்தி எழுதப்பட்டுள்ளது. 

நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம்  ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்து விட்டனர். பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார்.  ல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார். (1 கொரிந்தியர்:15: 3-8).

இயேசு கிறிஸ்து மரித்து உயிரோடு எழவில்லை என்றால் திருச்சபை பேசுவதற்கு ஒன்றுமில்லை. 

உயிர்த்தெழுந்தார் என ஏன் சாட்சி சொல்ல வேண்டும் :

யூத மத தலைவர்கள் இயேசுவின் கல்லறையைக் காவல் காத்த படை வீரர்களுக்கு மிகுதியான பணத்தைக் கொடுத்து, "அவர்கள் உறங்கும் போது இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் அவருடைய உடலைத் திருடிச் சென்று விட்டனர்" எனச் சொல்லும்படி செய்தனர். அவர்களும் தங்களுக்குச் சொல்லிக் கொடுத்தவாறே செய்தார்கள் (மத்தேயு 28: 12-15).

இதை மறுக்க வேண்டியது  சீடர்களது கடமையானது. அவர் உயிர்த்தெழுந்தார், நாங்கள் அவரை தரிசித்தோம் என்பதைச் சீடர்கள் தைரியமாகச் சாட்சியாக அறிவித்தனர். 

அப் 1:22/ 2:32/ 3:15/ 5:50-32.

செயல்படும் விசுவாசம் :

விசுவாசம் செயலில் வெளிப்பட வேண்டும். இல்லையென்றால் அது பயனற்றது. தினமும் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது என நம்புகிறோம். அது நல்ல விஷயம் தான். ஆனால் உடற்பயிற்சி செய்யாமல் இருந்து கொண்டு வெறும் நம்பிக்கையுடன் இருப்பதால் என்ன பயன்?

முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் தங்களது நம்பிக்கையை வாழ்க்கையில் வெளிப்படுத்தினார்கள். அவர்கள் சிறந்த முறையில் சாட்சி பகிர்ந்தனர். 

இந்த நூலில் சாட்சி என்கிற வார்த்தை 29 முறை  வருகிறது. 

Dr. Oswald Smith  இவ்விதம் குறிப்பிடுகிறார். 

God's people are expected to be witness and tell the lost about the Savior. As Christians we should begin our witness at home and then extend it "into all nations". "The light that shines the farther will shine brightest at home"

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பதை அவர் காண்பித்த வழியில் வாழ்வதன் வழியாக அறிவிக்க வேண்டும். அது தான் உண்மையான சாட்சி. 

அவர் உயிருடன் இருப்பதை நம்பினால், அவர் எப்போதும் நம்முடன் இருக்கிறார் என்ற உணர்வு இருக்கும். அவரோடு அதிகமாக பேசுவோம். வாழ்க்கையின் துயரங்களை தைரியமாக சந்திக்கும் மன உறுதி கிடைக்கும். எந்த சூழ்நிலையிலும் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம். 

பிறரது முன்னிலையில் தமது நடவடிக்கைகளைக் கவனமாக நல்ல விதத்தில் வெளிப்படுத்த வேண்டும் என மனிதர்கள் விரும்புவார்கள். இது  ஆளுமைத் திறன் (Personality ). தன்னை யாரும் பார்க்காத சூழலிலும்  தமது நடவடிக்கைகளைக் கண்ணியமாக இருக்க வேண்டும் எனக் கவனமாக இருப்பது நற்பண்பு (Good Character).

உயிர்த்தெழுந்த ஆண்டவரை உறுதியாக நம்புபவர்கள் பண்பும், ஆளுமையும் எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் ஒரே விதமாகவே இருக்கும். 


Saturday, 11 September 2021

திருத் தூதர் பணிகள்: அதிகாரம் 1:(4--5) -. வாக்குறுதி

தூய ஆவியால் திருமுழுக்கு. 


முதல் அதிகாரத்தில் நாம் கற்க வேண்டிய சில அருமையான பாடங்கள் உள்ளது. அதில் மிக முக்கியமானது தூய ஆவியால் அருளப்படும் திருமுழுக்கு. 

இயேசு கிறிஸ்து இதைச் சீடர்களுக்குக் கட்டளையாக அறிவித்தார். இந்த கட்டளை எல்லாக் காலத்திலும் வாழுகின்ற கிறிஸ்தவர்களுக்கும் உரியது. 

4. அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள். 

5 ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.

(அப் 1:4-5) 

இறைவனது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ தூய ஆவியானவர் அவசியம். ஒரு மனிதன் உயிர் வாழ மூச்சுக் காற்று எவ்வளவு முக்கியமோ அதேவிதமாக ஓர் ஆவிக்குரிய உள்ளான மனிதன் உயிரோடு வாழ தூய ஆவியானவர் தேவை. 

தூய ஆவியானவர் என்பது ஆண்டவர் அருளும் ஓர் உன்னதமான சக்தி ஆகும். இறைவன் அதை அருள் புரியும் போது அவர் மனித உள்ளத்தில் எழுந்தருளுகிறார். 

பரிசுத்த ஆவியானவர் ஞானத்தைத் தருகிறார். அவர் உள்ளத்தில் வந்தால் இதயம் உணர்வு அடையும். நாம் நடக்க வேண்டிய பாதைக்குத் தேவையான ஆலோசனையை அளிப்பார். 

தீமைக்கு விலகி வாழும் புத்தியைத் தருவார். தீய செயல்கள் மீது வெறுப்பு ஏற்படும். தூய்மையான செயல்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் உதிக்கும். 

அத்துடன் நல்ல பாதையில் நடந்து செல்ல தேவையான தைரியமும் வல்லமையும் அருளப்படும். கடவுளுக்குப் பயப்படும் பயம் எப்போதும் மனதில் நிலைத்து நிற்கும். 

இந்த திருமுழுக்கு அனுபவம் இல்லாமல் ஒருவராலும் உண்மை கிறிஸ்தவராக வாழ முடியாது. 

பரிசுத்த ஆவியானவர் குறித்து வேதத்திலிருந்து சில முக்கிய வசனங்கள்: 

1. இயேசு கிறிஸ்து ஆவியால் திருமுழுக்கு அளிப்பவர் (யோவான் 1:33).

இறைவன் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி திருமுழுக்கு யோவானை அனுப்பினார்.  

"நீ திருமுழுக்கு கொடுக்கும் போது தூய ஆவியானவர் யார் மீது இறங்குவதைப் பார்ப்பீரோ அவரே கிறிஸ்து. அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர்" . என  இறைவன் அவரிடம் சொல்லியிருந்தார். 

இங்கே கவனிக்கப்பட வேண்டியது "இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் கொடுப்பவர்" என்பதேயாகும். இது ஒரு வாக்குறுதி. 

"தீய தன்மையுடைய மக்கள், தங்களது பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை அமையக் கடுமையாகப் பாடுபடும் போது, இறைவனும் தமக்காக வாழ அர்ப்பணித்தவர்களுக்கு நன்மையானவற்றைத் தருவது அதிக நிச்சயம் அல்லவா?" என இயேசு கிறிஸ்து வினவினார். 

இங்கு "நன்மையானவற்றை" என இயேசு கிறிஸ்து குறிப்பிடுவது தூய ஆவியானவர் ஆகும். இந்த வாக்குறுதி நம் வாழ்வில் நிறைவேறிட வேண்டுதல் செய்ய வேண்டும். 

2. ஆவியானவர் வாழ்வு தரும் அழியாத நீரூற்று (யோவான் 7: 37-39) .

இயேசு கிறிஸ்து தாம் மகிமை அடைந்த பின்னர் தன்னிடம் விசுவாசமாக உள்ளவர்கள் அடையப் போகும் ஆவியானவரைக் குறித்து இந்த பகுதியில் குறிப்பிடுகிறார். 

அவர் சொல்வது:

"பரிசுத்த ஆவியானவர் அவர்களின் உள்ளத்தில் வந்து தங்குவார். அது உள்ளத்திலிருந்து ஒருபோதும் வற்றாத ஜீவ நதியாகப் பெருக்கெடுத்து ஓடும். இந்த அனுபவத்தை அவரை விசுவாசிப்பவர்கள் ஒவ்வொருவரும் பெறுவார்கள்" என உறுதி அளித்தார். 

3. ஆவியானவர் என்றென்றும் உடனிருப்பவர் (யோவான் 14: 16-17)

ஆவியானவர் செய்யும் சில செயல்களை இந்தப் பகுதியில் இயேசு கிறிஸ்து  வெளிப்படுத்துகிறார். 

a. அவர் உண்மையை வெளிப்படுத்துவார் (சத்திய ஆவி). 

b. அவர் ஆறுதல் தருபவர் (தேற்றரவாளன்). 

c.  அவர் எப்போதும் உங்களுடன் இருப்பார். 

d. உலக மக்கள் அவரை அறிய மாட்டார்கள். 

e. அவர் உங்கள் உள்ளத்தில் தங்குவார். அவர் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். 

4.  ஆவிக்குரிய உயிர் மூச்சு (யோவான் 20: 21-23). 

ஆதாம் உயிர் அடைவதற்குக் கடவுள் அவனது நாசியில் ஜீவ சுவாசத்தை ஊதினார். உள்ளான மனிதன் உயிர் அடைய இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியானவரை ஊதிப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று உரைத்தார். 

இதன் பொருள் சாட்சியாக வாழ ஆவியானவர் வல்லமை தேவை என்பதாகும். 

இறைவன் ஆதாமை தமது சாயலில் படைத்து இவ்வுலகில் அனுப்பியது போல கிறிஸ்துவும்  தமது சீடர்களை ஆவியானவர் திருமுழுக்கு பெற்றுப் பணி செய்ய அனுப்பி வைக்கிறார். 

தூய ஆவியானவர் வழி நடத்தும் வாழ்க்கை வாழும் படி ஆண்டவர் நம்மை அழைக்கிறார். 


Wednesday, 8 September 2021

திருத் தூதர் பணிகள் - நூல் அறிமுகம் - பகுதி 4: நூலின் உள்ளடக்கம்.

அப்போஸ்தல நடபடிகள் நூலின் உள்ளடக்கம்.

இந்தப் புத்தகத்தின் முதல் 12 அதிகாரங்கள் பேதுருவின் இறைப்பணியைச் சார்ந்து எழுதப்பட்டுள்ளது. அப்போது சீடர்கள் எருசலேமை மையமாக வைத்து இறைப்பணியைச் செய்தனர். 

ஆண்டவர் திருச்சபையின் திறவு கோல்களை பேதுருவிடம் ஒப்படைத்தார். அவர் வழியாகத் திருச்சபையின் கதவுகள் யூதேயா, சமாரியா, புற இனத்தைச் சேர்ந்தவர்களுக்குத் திறக்கப்பட்டது. இந்த நூலின் 8ம் அதிகாரம் முதல் 12ம் அதிகாரம் வரை நற்செய்தியின் பரவுதல்  யூதேயா, சமாரியா, புற இனத்தைச் சேர்ந்தவர்கள் என விரிவடைந்து செல்வதைக் காண முடிகின்றது. 

இந்த நூலின் 13ம் அதிகாரம் துவங்கி 28ம் அதிகாரம் வரை முழுமையாகப் பவுலின் இறைப்பணியை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. தலைமையகம் எருசலேமிலிருந்து அந்தியோக்கியாவிற்கு இட மாற்றம் அடைகிறது.

இந்த நூலின் ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒரு பிரச்சினை எழுவதைப் பார்க்க முடியும். அதற்கான தீர்வும் அந்த அதிகாரத்தின் இறுதியில் காணப்படும். 

ஒவ்வொரு அதிகாரத்திலும் எழுதப்பட்டுள்ள சம்பவங்களை எளிதாகப் புரிந்து கொள்வதற்கு கீழ்க் காணும் உபதலைப்புக் குறிப்புகள் உதவும். 


 திகாரம்

 விவரங்கள் - குறிப்புகள் 

1.

முன்னுரை பரிசுத்த ஆவியானவர் ஞானஸ்நானம் - விசுவாச வாழ்க்கையின் நோக்கம் - 12வது அப்போஸ்தலராக மத்தியா தெரிவு. 

2.

பரிசுத்த ஆவியானவர் சீடர்கள் மேல் அருளப்படுதல் - பேதுருவின் முதல் அருளுரை - செய்தியின் மையம்: கிறிஸ்து உயிர்த்தெழுந்தார், அதற்கு நாங்கள் சாட்சி - சபை உருவானது. 

3.

பேதுரு, யோவான் - கால் ஊனமுற்றவர் குணமடைதல் - சாலமோன் மண்டபத்தில் பேதுருவின் அருளுரை: இயேசுவே மெசியா என அறிவிப்பு.   

4.

யூத ஆலோசனைச் சங்கத்தின் முன் பேதுருவும் யோவானும் - முதல் விசாரணை

5.

அனனியாவும் சப்பிராவும் பொய் சொல்லுதல்; பேதுருவும், யோவானும் யூத சமயத் தலைவர்களால் துன்புறுத்தப்படுதல். 

6.

சபை மூப்பர்கள் நியமித்தல்.

7.

ஸ்தேவானின் அருளுரை. முதல் இரத்த சாட்சியாக தூய ஸ்தேவான் மரணம். (The Bible within the Bible). 

8

யூதேயா, சமாரியாவில்  நற்செய்தி அறிவிப்பு, எத்தியோப்பிய அமைச்சருக்கு பிலிப்பு நற்செய்தி அறிவித்தல்

9.

பவுல் மனமாற்றம் - பேதுருவின் குணமாக்கும் பணிகள். 

10.

புற இனத்தவருக்கு நற்செய்தி - பேதுருவும் கொர்னேலியுவும். 

11.

எருசலேம் திருச்சபை புற இனத்தவரை ஏற்றுக் கொண்டது. 

12.

யாக்கோபு கொலை செய்யப்படுதல் , பேதுரு எருசலேமிலிருந்து வெளியேறினார். 

13.

பவுலின் முதல் மிஷனரிப் பயணக் குறிப்புகள். 

14.

15.

எருசலேம் சங்கத்தின் தீர்மானம். 

16.

பவுலின் இரண்டாவது மிஷனரிப் பயணக் குறிப்புகள். 

17.

18.

பவுலின் இரண்டு மற்றும் மூன்றாவது மிஷனரிப் பயணக் குறிப்புகள். 

19.

பவுலின் மூன்றாவது மிஷனரிப் பயணக் குறிப்புகள். 

20.

21.

பவுல் எருசலேம் திரும்புதல்.

22.

எருசலேம் தேவாலயத்தில் பவுல் சாட்சி - கிறிஸ்துவை அறிவித்தார்.  

23.

கிலவுதியு லீசியா முன் விசாரணை: யூதர்கள் பவுலுக்கெதிரான சூழ்ச்சி - பவுல் செசரியாவுக்கு அனுப்பப்படுதல். 

24.

பெலிக்ஸ் முன் விசாரணை -  பவுல் இரண்டு ஆண்டுகளுக்கு செசரியாவில் சிறைவாசம். 

25.

பொர்க்கியு பெஸ்து முன் விசாரணை - சீசரின் விசாரணையை பவுல் நாடுதல். 

26.

அகிரிப்பா முன் விசாரணை -  பவுல் சாட்சி - கிறிஸ்துவை அறிவித்தார்.  

27.

பவுல் கைதியாக, கடல் மார்க்கமாக ரோமிற்கு அழைத்துச் செல்லப்படுவது. 

28.

பவுல் ரோம் அடைதல் யூதர்கள் மத்தியில் கிறிஸ்துவை சாட்சி கூறுதல் - இரண்டு வருடம் ரோமில் நற்செய்தி அறிவிப்பு. 

இனி ஒவ்வொரு அதிகாரத்தின் விளக்கத்தை கற்றுத் தெளிவாக புரிந்து கொள்வோம். 

திருத் தூதர் பணிகள் - நூல் அறிமுகம் - பகுதி 3: பொதுவான குறிப்புகள்

 அப்போஸ்தல நடபடிகள்: பொதுவான குறிப்புகள்

நூலின் தலைப்பு :

மூல நூலில் இந்த புத்தகத்தின் தலைப்பு "நடபடிகள்" என்று  எழுதப்பட்டுள்ளது. பிற்காலத்தில் திருச்சபைத் தலைவர்களால் "அப்போஸ்தல நடபடிகள்" எனும் தலைப்பு இடப்பட்டது. "APPO" என்பதன் பொருள் "போ". "STELLO" என்றால் "செய்தி".  "நற்செய்தியுடன் சென்றவர்கள் செய்த செயல்களின் தொகுப்பு" என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஆசிரியர் குறித்து மேலதிக தகவல்கள்:

"Proselyte" என்கிற வார்த்தை "யூத சமயத்தை விரும்பி ஏற்றுக் கொண்ட புற இனத்தைச் சேர்ந்தவர்களை" குறிப்பிடும் ஓர் சொல். இவர்களைக் குறித்து "யூத மார்க்கத்தமைந்தவர்" என வேதத்தில் கூறப்பட்டுள்ளது (அப்: 2:10). லூக்கா கிரேக்க இனத்தை விட்டு விட்டு யூத சமயத்தை விரும்பி ஏற்றவர் என நம்பப்படுகிறது. 

அவர் எழுதிய இரண்டு நூல்களும் 'மகா கனம் பொருந்திய தெயோப்பிலு" என்பவருக்கு எழுதப்பட்டுள்ளது. தெயோப்பிலு அவர்களை "மகா கனம்" எனக் குறிப்பிடப்படுவதன் மூலம் இவர் மிக உயர்ந்த பொறுப்பை வகிப்பவர் எனப் புரிந்து கொள்ள முடிகிறது. 

தெயோப்பிலு என்ற பெயரின் பொருள் தேவ நேசன். (Theo - God, Philio - Friendly Love). இவரும் கிரேக்கர் என்பது இவரது பெயர் மூலம் அறிய முடிகிறது. இவர் கிறிஸ்தவ உபதேசங்களைத் தெளிவாக அறிந்து கொள்ள விரும்பினார் (லூக்கா 1:3).

திருமுறையில் லூக்காவின் பங்களிப்பு :

புதிய ஏற்பாடு குறித்து AGNT (Analytical Greek New Testament), அளிக்கும் தகவல்கள் சுவாரஸ்யமானது. 

"புதிய ஏற்பாடு" புத்தகத்தில் மொத்தம் 1,38,020 கிரேக்க வார்த்தைகள் உள்ளது. அவற்றுள் புனித லூக்கா 37, 933 வார்த்தைகள் எழுதியுள்ளார். இது 27% பங்களிப்பு ஆகும். புனித பவுல் 13 நிருபங்கள் வழியாக 32,407 வார்த்தைகள் எழுதியுள்ளார். இது 23% ஆகும். புனித யோவான் 5 நூல்கள் மூலம் 20% வார்த்தைகள் எழுதியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக லூக்கா அவர்கள் புதிய ஏற்பாடு நூலில் மிக அதிக பங்களிப்பு வழங்கியுள்ளார். 

 இந்த புத்தகம் ஒரு தொடர் சரித்திரம் :

இந்த புத்தகம் ஐந்தாவது நற்செய்தி நூல் என அழைக்கப்படுகிறது. "வில்லியம் ராம்ஸே" அவர்கள் இந்த புத்தகம் ஒரு உயர்ந்த சரித்திர நூல் எனக் கூறியுள்ளார்.  ஆதியாகமம் பௌதீக உலகின் துவக்கத்தைக் கூறுகிறது. இந்த நூல் திருச்சபையின் தோற்றத்தைக் கூறுகின்றது

இப் புத்தகத்தில் 28 அதிகாரங்கள், 1006 வசனங்கள் உள்ளன. ஏறக்குறைய 30 வருட காலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் எழுதப்பட்டுள்ளது. எனினும் இதன் இறுதிப் பகுதி எவ்விதமான முடிவுரையும் இல்லாமல் சட்டென்று நிறைவடைகிறது. 

இதன் பொருள் இந்த சரித்திரம் ஒரு தொடர் கதை. அது கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரை தொடர்ந்து விசுவாசிகளால் எழுதப் பட வேண்டும். 

உண்மையில் அது அவ்விதமாகவே கடந்த 2021 வருடங்களாகப் பல தேவ மனிதர்களால் எழுதப் பட்டு வந்திருக்கிறது. இந்த உலகில் உள்ள ஒவ்வொரு தேசத்திலும் பல இரத்த சாட்சிகள் வழியாக அது எழுதப்பட்டது. 

இன்று ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு தனித்துவ திருச்சபை வரலாறு இருக்கிறது. அது தொடர்ந்து ஆவியானவர் வழியாகத் தேவ மனிதர்களால் எழுதப் பட்டும் வருகிறது.