தூய ஆவியால் திருமுழுக்கு.
முதல் அதிகாரத்தில் நாம் கற்க வேண்டிய சில அருமையான பாடங்கள் உள்ளது. அதில் மிக முக்கியமானது தூய ஆவியால் அருளப்படும் திருமுழுக்கு.
இயேசு கிறிஸ்து இதைச் சீடர்களுக்குக் கட்டளையாக அறிவித்தார். இந்த கட்டளை எல்லாக் காலத்திலும் வாழுகின்ற கிறிஸ்தவர்களுக்கும் உரியது.
4. அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.
5 ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.
(அப் 1:4-5)
இறைவனது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ தூய ஆவியானவர் அவசியம். ஒரு மனிதன் உயிர் வாழ மூச்சுக் காற்று எவ்வளவு முக்கியமோ அதேவிதமாக ஓர் ஆவிக்குரிய உள்ளான மனிதன் உயிரோடு வாழ தூய ஆவியானவர் தேவை.
தூய ஆவியானவர் என்பது ஆண்டவர் அருளும் ஓர் உன்னதமான சக்தி ஆகும். இறைவன் அதை அருள் புரியும் போது அவர் மனித உள்ளத்தில் எழுந்தருளுகிறார்.
பரிசுத்த ஆவியானவர் ஞானத்தைத் தருகிறார். அவர் உள்ளத்தில் வந்தால் இதயம் உணர்வு அடையும். நாம் நடக்க வேண்டிய பாதைக்குத் தேவையான ஆலோசனையை அளிப்பார்.
தீமைக்கு விலகி வாழும் புத்தியைத் தருவார். தீய செயல்கள் மீது வெறுப்பு ஏற்படும். தூய்மையான செயல்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் உதிக்கும்.
அத்துடன் நல்ல பாதையில் நடந்து செல்ல தேவையான தைரியமும் வல்லமையும் அருளப்படும். கடவுளுக்குப் பயப்படும் பயம் எப்போதும் மனதில் நிலைத்து நிற்கும்.
இந்த திருமுழுக்கு அனுபவம் இல்லாமல் ஒருவராலும் உண்மை கிறிஸ்தவராக வாழ முடியாது.
பரிசுத்த ஆவியானவர் குறித்து வேதத்திலிருந்து சில முக்கிய வசனங்கள்:
1. இயேசு கிறிஸ்து ஆவியால் திருமுழுக்கு அளிப்பவர் (யோவான் 1:33).
இறைவன் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி திருமுழுக்கு யோவானை அனுப்பினார்.
"நீ திருமுழுக்கு கொடுக்கும் போது தூய ஆவியானவர் யார் மீது இறங்குவதைப் பார்ப்பீரோ அவரே கிறிஸ்து. அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர்" . என இறைவன் அவரிடம் சொல்லியிருந்தார்.
இங்கே கவனிக்கப்பட வேண்டியது "இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் கொடுப்பவர்" என்பதேயாகும். இது ஒரு வாக்குறுதி.
"தீய தன்மையுடைய மக்கள், தங்களது பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை அமையக் கடுமையாகப் பாடுபடும் போது, இறைவனும் தமக்காக வாழ அர்ப்பணித்தவர்களுக்கு நன்மையானவற்றைத் தருவது அதிக நிச்சயம் அல்லவா?" என இயேசு கிறிஸ்து வினவினார்.
இங்கு "நன்மையானவற்றை" என இயேசு கிறிஸ்து குறிப்பிடுவது தூய ஆவியானவர் ஆகும். இந்த வாக்குறுதி நம் வாழ்வில் நிறைவேறிட வேண்டுதல் செய்ய வேண்டும்.
2. ஆவியானவர் வாழ்வு தரும் அழியாத நீரூற்று (யோவான் 7: 37-39) .
இயேசு கிறிஸ்து தாம் மகிமை அடைந்த பின்னர் தன்னிடம் விசுவாசமாக உள்ளவர்கள் அடையப் போகும் ஆவியானவரைக் குறித்து இந்த பகுதியில் குறிப்பிடுகிறார்.
அவர் சொல்வது:
"பரிசுத்த ஆவியானவர் அவர்களின் உள்ளத்தில் வந்து தங்குவார். அது உள்ளத்திலிருந்து ஒருபோதும் வற்றாத ஜீவ நதியாகப் பெருக்கெடுத்து ஓடும். இந்த அனுபவத்தை அவரை விசுவாசிப்பவர்கள் ஒவ்வொருவரும் பெறுவார்கள்" என உறுதி அளித்தார்.
3. ஆவியானவர் என்றென்றும் உடனிருப்பவர் (யோவான் 14: 16-17).
ஆவியானவர் செய்யும் சில செயல்களை இந்தப் பகுதியில் இயேசு கிறிஸ்து வெளிப்படுத்துகிறார்.
a. அவர் உண்மையை வெளிப்படுத்துவார் (சத்திய ஆவி).
b. அவர் ஆறுதல் தருபவர் (தேற்றரவாளன்).
c. அவர் எப்போதும் உங்களுடன் இருப்பார்.
d. உலக மக்கள் அவரை அறிய மாட்டார்கள்.
e. அவர் உங்கள் உள்ளத்தில் தங்குவார். அவர் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.
4. ஆவிக்குரிய உயிர் மூச்சு (யோவான் 20: 21-23).
ஆதாம் உயிர் அடைவதற்குக் கடவுள் அவனது நாசியில் ஜீவ சுவாசத்தை ஊதினார். உள்ளான மனிதன் உயிர் அடைய இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியானவரை ஊதிப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று உரைத்தார்.
இதன் பொருள் சாட்சியாக வாழ ஆவியானவர் வல்லமை தேவை என்பதாகும்.
இறைவன் ஆதாமை தமது சாயலில் படைத்து இவ்வுலகில் அனுப்பியது போல கிறிஸ்துவும் தமது சீடர்களை ஆவியானவர் திருமுழுக்கு பெற்றுப் பணி செய்ய அனுப்பி வைக்கிறார்.
தூய ஆவியானவர் வழி நடத்தும் வாழ்க்கை வாழும் படி ஆண்டவர் நம்மை அழைக்கிறார்.

No comments:
Post a Comment