நூல் பின்னணி.
நூல் ஆசிரியர் :
அப்போஸ்தல நடபடிகள் என்னும் இந்த நூல் லூக்கா நற்செய்தி நூலின் தொடர்ச்சியாக எழுதப்பட்ட இரண்டாம் பாகம் ஆகும்.
லூக்கா நற்செய்தி நூலைப் போலவே இந்த புத்தகமும் "தெயோப்பிலு" என்கிற மனிதரின் பெயருக்கு எழுதப்பட்டுள்ளது (1:1).
இந்த நூல் பவுலுடன் இணைந்து பணியாற்றிய ஒருவரது சுய அனுபவங்களையும் உள்ளடக்கியது (16:10).
இந்த நூலை எழுதியவர் பெயர் குறித்து நேரிடையான குறிப்பு இல்லை. எனினும் நூலின் உள் குறிப்புகள் மற்றும் மொழிநடை அவர் பிரியமான வைத்தியராகிய "லூக்கா" ஆக இருக்கக் கூடும் எனப் பொதுவாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.
லூக்கா ஒரு மருத்துவர். இவர் கிரேக்க இனத்தை சேர்ந்தவர். சிரியா நாட்டின் அந்தியோக்கியாவில் வசித்தவர் என நம்பப்படுகின்றது (கொலொ 4:11-14, பில 24:2).
திருத்தூதர் பவுலோடு அவரது இண்டாவது மிஷனரிப் பயணத்தில் இணைந்தார் (அப் 16:10). பவுலோடு இறுதிவரை இணைந்து நற்செய்தி பணியைச் செய்தவர் (2 திமொத்தேயு 4:14).
காலம்:
இந்த நூல் கி.பி 62 - கி.பி 64க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது.
நோக்கம்:
1. ஒவ்வொரு கிறிஸ்தவரும், ஆண்டவரின் உயிர்த்தெழுதலை தங்கள் சாட்சியுள்ள வாழ்க்கை மூலம் பிறருக்கு பகிர்ந்து கொள்ள வேண்டும் (1:8). இதுவே அவர்களின் முதன்மையான பணி என்பதை வலியுறுத்துகிறது.
2. ஆதித் திருச்சபை உருவான வரலாறு மற்றும் திருச்சபையை எவ்விதம் சீடர்கள் வழி நடத்தினார்கள் என்பதையும் இந்த நூல் விவரிக்கிறது.
3. நான்கு நற்செய்தி நூல்கள் - திருச்சபைநிருபங்கள்; இந்த இரண்டையும் இணைக்கும் பாலமாக இந்த நூல் செயல்படுகிறது.
4. திருத்தூதர் பவுலின் ஊழியம், உபதேசங்கள் விவரமாக எழுதப் பட்டுள்ளது. இதனால் அவர் எழுதிய நிருபங்களை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
5. கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட இரண்டாம், மூன்றாம் தலைமுறை விசுவாசிகளுக்கும், எதிர்கால திருச்சபைக்கும் பயன்படும் வகையில் சபை உருவான சரித்திரத்தை முறையாக ஆவணப்படுத்திடவும் எழுதப்பட்டுள்ளது.
திறவுகோல் வசனம் :
தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும், யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள் (1:8).
திறவுகோல் வார்த்தை:
சாட்சி: 1:8/ 1:22/ 2:32/ 2:40/ 3:15/ 4:33/ 5:32/ 7:56/ 8:25/ 9:15/ 10:43/ 13:31/ 14:3/ 14:17/ 16:31/ 17:3/ 19.11/ 22:20/ 23:11/ 24:11/ 26:1/ 28:23.
சாட்சி என்பதற்கு உபயோகம் செய்யப்பட்ட கிரேக்க வார்த்தை "Martyr". அதன் பொருள் "உயிரே போனாலும், பார்த்ததை, கேட்டதை, அனுபவித்ததை அப்படியே உண்மையாகச் சொல்லுதல்" என்பதாகும்.
நூலின் துல்லியம்:
இந்த நூலில் 32 நாடுகள், 54 நகரங்கள், 95 நபர்களின் பெயர்கள், அரசர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களது பதவிகளைப் பற்றிய குறிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை தற்கால தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளுடன் துல்லியமாகப் பொருந்தியுள்ளது.
வரலாற்றுப் பின்னணி - இயேசுவின் இறைப்பணி :
இஸ்ரேல் தேசம் ரோமப் பேரரசின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருந்தது. யூத தலைவர்கள் இஸ்ரேலின் மாகாணங்களின் ஆளுநர் களாக ரோமப் பேரரசால் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். மக்களிடம் வரி வசூல் செய்வது அவர்கள் வேலை.
யூதர்களது சமய சங்கமும் ஒரு வலுவான அமைப்பாகச் செயல்பட்டு வந்தது. அவர்களுக்கும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு இருந்தது.
ரோமப் பேரரசின் ஆட்சி அடிமைத்தனத்திலிருந்து தங்களை விடுவிக்கக் கடவுள் மெசியாவை (மீட்பர்) அனுப்புவார் என நம்பிக்கையுடன் யூத மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
அத்தகையச் சூழலில் இயேசு கிறிஸ்து அவதரித்தார். அவர் தனது 30வது வயதில் யூதர்கள் மத்தியில் இறைப்பணியைத் துவங்கினார். இறைவனிடம் இருந்து வந்த மெசியா என தன்னை அறிவித்தார். மூன்றரை ஆண்டுகள் இறைப்பணி செய்தார்.
இயேசு கிறிஸ்துவின் பணிகள்:
"மனம் திரும்புங்கள். இந்த உலகில் இறைவனது ஆட்சி வெகு விரைவில் அமைய உள்ளது". இதுவே அவரது போதனைகளின் மையக் கருத்து.
எளிமையான உவமைகள், கதைகள் வழியாகப் போதித்தார். அதிகாரத்துடன் பேசினார் (authoritative). அதை மக்கள் மிக விருப்பத்துடன் கேட்டனர்.
இயேசு பிரமிக்க வைக்கும் பல அற்புதங்கள் செய்தார். பலர் நோயிலிருந்து குணமடைந்தார். பார்வையற்றவர்கள் பார்வை பெற்றனர். ஊனமுற்றவர்கள் நன்றாக நடந்தனர். தொழுநோய் சுகமானது. இறந்தவர் மீண்டும் உயிர் பெற்றனர். காற்றும், கடலும் கூட அவரது வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டது.
அவரைத் தங்களது அரசராக்க மக்கள் விரும்பினர். சீடர்களிடமும் அத்தகைய விருப்பம் இருந்தது. ஆனால் இயேசுவிற்கு பணம், அதிகாரம், புகழ் இவற்றில் விருப்பம் இல்லை. அவற்றை வெறுத்து ஒதுக்கினார். அவருக்கு ஆட்சி அமைக்கும் திட்டமும் இல்லை. எனவே மக்களிடமிருந்து விலகி பாலை வனாந்தரங்களில் வசித்து வந்தார்.
எனினும் அவரை மக்கள் விடவில்லை. அவர் இருக்கும் இடம் தேடித் தொடர்ந்து சென்றனர். ஆனால் இயேசு தமது இறையரசு இவ்வுலகுக்கு உரியதல்ல என்றார்.
தம்மைப் பின்பற்றுபவர்கள், "அதிகாரத்தை நாடாமல் மக்களுக்கு ஒரு ஊழியக்காரனைப் போல சேவைச் செய்ய வேண்டும்" எனக் கற்பித்தார். "எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும்" எனப் போதித்தார்.
தன்னை "இந்த உலகத்தின் பாவத்திற்காகப் பாடுபட்டு இரத்தம் சிந்தும் ஒரு பலி ஆடு" எனக் கூறினார். "சிலுவையில் தான் பாடுபட்டு மரணம் அடைய வேண்டும், அதன் பின்னர் மூன்றாவது நாளில் மீண்டும் உயிர்த்தெழுவேன்" எனப் பல முறை அறிவித்தார்.
கொடூர குற்றம் இழைப்பவர்கள் சிலுவையில் அறைந்து கொல்லப்படுவார்கள். அது ஓர் அவமான மரணம். பல சீடர்கள் அதிகாரம், பதவி, வசதியான வாழ்க்கை கிடைக்கும் என்று அவரைப் பின்தொடர்ந்தனர். அவருடைய "சிலுவை மரணம்" உபதேசங்கள் பல சீடர்களுக்குப் பிடிக்கவில்லை. இதனால் பலர் அவரை விட்டு விலகினர்.
இறுதியில் பன்னிரண்டு சீடர்கள் மட்டும் அவரைப் பின்பற்றினர். அவர்களும் கூட இயேசுவின் சிலுவை மரணத்தை விரும்பவில்லை.
இயேசு கிறிஸ்து - சமயத் தலைவர்கள் மோதல்:
யூத சமயத் தலைவர்கள் இயேசுவின் அபரிமிதமான புகழைக் கண்டு பொறாமை அடைந்தனர்.
மக்கள் செல்வாக்கு அவருக்கு இருந்ததால் அவர் உபதேசம் செய்வதை அவர்களால் தடுக்க முடியவில்லை.
ஆனாலும், இது இப்படியே தொடர்ந்தால் ரோமப் பேரரசு தங்களது பதவியை பறித்துக் கொண்டு விடுமோ என்று கடும் அச்சம் அடைந்தனர்.
எனவே இயேசுவை மக்கள் வெறுக்கும் படி பல தந்திரமான சூழ்ச்சிகளைச் செய்தனர். அவரைக் கொலை செய்வது என்றும் முடிவு செய்தனர்.
மதச் சடங்கு, மத சட்டம், ரோமப் பேரரசின் சட்டங்கள் இவற்றை மீறி அவர் செயல்படுகிறார் எனக் குற்றம் சாட்டிட முயன்றனர்.
மத சட்டம் - ஓய்வு நாள் மீறல் - புதிய விளக்கம்:
யூதர்களுக்குச் சனிக்கிழமை புனிதமான ஓய்வு நாள். "ஓய்வு நாளில் வேலை செய்யக் கூடாது" என்பது பத்து கட்டளைகளில் ஒன்று.
நோயால் வருத்தப்பட்ட ஒருவரை ஓர் ஓய்வு நாளில் இயேசு குணப்படுத்தினார்.
உடனே சமயத் தலைவர்கள்,
"கடவுளிடம் இருந்து வந்தவன் எப்படி ஓய்வு தினத்தில் வேலை செய்வான்"?
"இவன் கடவுளிடம் இருந்து வந்தவன் இல்லை. தீய சக்திகள் துணை கொண்டு குணப்படுத்துகிறான்" எனக் குற்றம் சாட்டினர்.
இயேசு அவர்களை நோக்கி,
"ஓய்வு நாளில் உங்கள் ஆடு அல்லது மாடு குழியில் விழுந்தால் அதை நீங்கள் தூக்கி மீட்காமல் விட்டு விடுவீர்களா? ஆடு, மாட்டுக்குக் காட்டும் அக்கறை இந்த மனிதருக்கு நான் காட்டுவது தவறா? என வினவினார். இயேசு அவர்கள் வெளி வேஷத்தைக் கலைத்தார். ஆனால் அவர்களோ கோபவெறி கொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவரோடு ஒருவர் ஆலோசித்தனர்
(லூக்கா 6: 1-11/மத் 12: 9-14/ மாற்கு 3: 1-6).
மத சட்டம் - தண்டனை -புதிய தீர்ப்பு:
யூத சமயத் தலைவர்கள், விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை அவரிடம் குற்றவாளியாக கொண்டு வந்தனர்.
"இந்த பெண் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டவள். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்லப் பட வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டம். நீர் என்ன சொல்கிறீர்?" என்று வினவினர். அவர் மேல் குற்றம் சுமத்த ஏதாவது ஒரு காரணம் கண்டு பிடிக்க வேண்டும் என்பதற்காகக் கேட்டனர்.
இயேசு அன்பை, மன்னிப்பை, கருணையைப் போதித்தவர். அவளை மன்னித்து விடுவித்து விட்டால், மோசேயின் சட்டத்தை மீறி செயல் படுகிறார் எனக் குற்றம் சாட்ட முடியும்.
"அவளைக் கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றுங்கள்" என்று தீர்ப்புக் கூறினால் அன்பு, மன்னிப்பு, கருணை போன்ற உபதேசங்கள் பொருளற்றதாக்கி விடும்.
இயேசு அவர்கள் தந்திரத்தை அறிந்து அவர்களை நோக்கி, "உங்களில் பாவம் செய்யாதவன் இவள் மீது முதல் கல்லை எறியலாம்" என்றார்.
அந்த திரளான கூட்டம் குற்றப்பட்ட இருதயத்துடன் அப்படியே கலைந்து சென்றனர்.
இயேசு அந்த பெண்ணை பார்த்து, "ஒருவரும் உன்னைத் தண்டிக்க வில்லையா?" "நானும் உன்னைத் தண்டிக்கப் போவதில்லை. ஆனால் இனிமேல் பாவம் செய்யாதே" என்றார்.
மதச் சடங்கு - காணிக்கை செலுத்துதல்:
யூதர்கள் பாவத்திற்குப் பரிகாரமாக ஆடு, மாடு, பறவைகள் இவற்றைப் பலி செலுத்துவது வழக்கம்.
எனவே எருசலேம் தேவாலயம் ஒரு வியாபார மையமாகக் காணப்பட்டது. அது ஆடு, மாடு, பறவைகள் விற்கும் சந்தை போல கடைகளால் சூழப்பட்டிருந்தது.
யூதர்கள் பல தேசங்களில் வசித்து வந்தனர். எனவே அங்குப் பல தேசத்தின் பணப் பரிவர்த்தனையும் (money exchange) நடந்தது.
இயேசு தேவாலயம் பணம் சம்பாதிக்கும் இடம் இல்லை எனக் கண்டித்தார். அங்கிருந்த வியாபாரிகளை சாட்டையால் அடித்து விரட்டினார்.
இறைவன் பலிகளை அல்ல மனம் மாசற்றதாக உருமாற்றம் அடைய உழைப்பதே உண்மையான பலி எனப் போதித்தார்.
இது யூத சமயத் தலைவர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால் மக்களிடம் அவருக்குச் செல்வாக்கு இருந்ததால் அவரை எதுவும் செய்ய முடியவில்லை.
இயேசு - ரோமப் பேரரசு இடையே கலகம் மூட்டும் சூழ்ச்சி:
இயேசுவுக்கும் ரோமப் பேரரசுக்கும் இடையே கலகம் உண்டு பண்ண மதத் தலைவர்கள் தந்திரம் செய்தனர். அவரிடம் ஒற்றர்களை அனுப்பினர்.
அவர்கள் அவரிடம் ரோம நாணயத்தைக் காண்பித்து சீசருக்கு கப்பம் கட்டுவது சரியா, தவறா எனத் தந்திரமாகக் கேட்டனர்.
இயேசு நாணயத்தைக் காண்பியுங்கள் என்றார். அதில் உள்ள எழுத்தும், உருவமும் யாருடையது என அவர்களிடம் கேட்டார்.
அவர்கள் "சீசருடையவை" என்றார்கள்.
அப்படியானால் சீசருக்கு உரியவற்றை சீசருக்கும், கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் செலுத்துங்கள் என பதில் தந்தார்.
இப்படி இடைவிடாது பல வழிகளில் அவரைத் தொடர்ந்து குற்றம் சாட்டி தொல்லை அளித்தனர்.
இயேசு சிறைப்படுதல் - சிலுவை மரணம்:
இறுதியாக எந்த குற்றமும் செய்யாத இயேசுவை ஓர் இரவில் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பின்னர் அவர் மீது மரண தண்டனை விதிக்க ஏதுவாக என்ன குற்றம் சுமத்தலாம் என ஆலோசனை செய்தனர்.
கைது செய்யப்பட்ட பின்னர் ஒருவர் மீது பழி சுமத்த யோசிப்பது எவ்வளவு பெரிய கொடுமை!!!
அவர் மீது பல குற்றங்களைச் சுமத்தினார்கள். ஆனால் அது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட போதுமானதாக இல்லை.
சிலர் "இவன் எருசலேம் தேவாலயத்தை இடித்துப் போடுங்கள், நான் அதை மூன்று நாட்களில் திரும்ப கட்டுவேன்" எனக் கூறியதாக குற்றம் சாட்டினர்.
அவர் தனது உடலை ஆலயம் எனக் குறிப்பிட்டார். "என்னைக் கொலை செய்தாலும் மூன்று நாளில் நான் திரும்பவும் உயிர்த்தெழுவேன்" என்று அவர் சொன்னதை இவ்வாறு திரித்துக் கூறினார்கள்.
ஆனாலும் அவர்கள் கூறிய எந்தக் குற்றச்சாட்டும் அவருக்கு மரண தண்டனை வழங்குமளவுக்கு போதுமானதாக இல்லை.
இறுதியில் அவர்கள் அவரை நோக்கி
"நீர் வணங்கப்படத்தக்கக் கடவுளின் ஒரே மகனா?" எனப் பகிரங்கமாக விசாரணை வளையத்தில் வைத்துக் கேட்டனர்.
அதற்கு இயேசு "ஆம், நீங்கள் சொல்வது போல நான் கடவுளின் குமாரன்" எனப் பதில் தந்தார்.
யூதர்கள் ஒரே கடவுள் கோட்பாடு உடையவர்கள். யாவே எனும் தெய்வத்தை மட்டும் வழிபாடு செய்பவர்கள். தங்கள் இனத்தைச் சேர்ந்தவர் வேறு ஏதாவது ஓர் தெய்வத்தை வணங்கினால், அவர்களைக் கொலை செய்யவும், அவர்களது மதச் சட்டம் அனுமதிக்கிறது.
எனவே இயேசு தம்மைக் கடவுளுடைய குமாரன் எனக் கூறியதை அவர்களால் ஏற்க முடியவில்லை. அவர்களுக்கு இயேசுவின் தாயார், சகோதர, சகோதரிகளை நன்கு தெரியும். அவரது குடும்பத்தையும் நன்கு அறிவார்கள்.
எனவே இயேசு தம்மை தேவகுமாரன் எனக் கூறியதைக் கடுமையான தேவ தூஷணமாக, அவதூறான காரியமாகக் கருதினார்கள்.
இந்தச் சூழலை யூத சமயத் தலைவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
அவர் கடவுளைப் பழிப்பதாகக் கூறினார்கள். அதனால் அவரைச் சிலுவையில் அறைந்து கொலை செய்யும்படி மக்களைத் தூண்டி விட்டார்கள்.
ரோம அதிகாரத்திலிருந்த ஆளுநர் முயன்றும் அவரை விடுதலை செய்ய முடியவில்லை. யூதர்களால் இயேசு சிலுவையில் அறைந்து கொலை செய்யப்பட்டார்.
இயேசு மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்தார். அதன் பிறகு 40 நாட்கள் தம்முடைய சீடர்களுக்கு தரிசனம் தந்தார். ஆவியானவர் அவர்கள் மீது ஊற்றப்படும் வரை எருசலேமில் காத்திருக்கும் படி கூறினார். அதன் பின்னர் அவருடைய உபதேசங்களை உலகின் கடைசி எல்லை வரை அறிவிக்கும் படி கட்டளை தந்தார். அவர் விண்ணகம் சென்றார்.
இதற்கு பிறகு திருச்சபை வரலாற்றின் 30வருட நிகழ்ந்த நிகழ்வுகளின் தொகுப்பு தான் இந்த நூல் (கி.பி 33 - 63).
(தொடரும்).
References:
1. திருமறை பொது மொழி பெயர்ப்பு,
2. The Holy Bible New Revised Standard Version.
3. நிறை வாழ்வு ஆய்வு வேதாகமம் _ The Full Life Study Bible (Tamil version), Life Publishers International, USA.
4.The Wiersbe Bible Commentary, Warren W. Wiersbe, www.davidcook.com
Image source: From Internet with thanks.