Saturday, 21 August 2021

ஏன் வேதத்தை முறையாக் கற்க வேண்டும்?

ன் வேதத்தை முறையாகக் கற்க வேண்டும்? 


1. பக்தி உணர்வில் நிலை பெற வேண்டும். (எபேசியர்: 3: 16-19)

கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து வாழ்வதே வாழ்க்கையை முழுமையாக்குகிறது. 

சுவை மிகுந்த கனி தரும் மரம் போல வாழ்க்கை வளம் பெறுகிறது. 

மனதில் பக்தி எனும் தீபம் சுடர்விட, வேத வசனங்கள் எனும் எண்ணெய் தொடர்ந்து ஊற்றப்பட வேண்டும். 

வேதத்தைத் தொடர்ந்து முறையாக கற்றுக் கொள்வதன் வழியாக இறை பக்தி மனதில் நிலைத்து நிற்கிறது. உள்ளத்தில் வல்லமையும் ஆற்றலும் அருளப்படுகிறது. எனவே வேதத்தை நாம் ஆவலுடன் முறையாக கற்றுக் கொள்ள வேண்டும். 

2. மனம் தூய்மை அடைய வேண்டும். (ரோமர்:12: 1-2)

மனம் மாசற்றதாக உருமாற்றம் அடைய உழைப்பதே வாழ்க்கையில் மிக மேன்மையான முயற்சி. 

மனித உள்ளம் பெருமை, பேராசை, பொறாமை, கோபம், பிறர் பொருளை விரும்புதல், பிறரை அடக்கி ஆள முற்படுதல்.., போன்ற பல தீய உணர்ச்சிகளுக்கு அடிமையாக இருக்கிறது.

மனம் இத்தகைய தீய உணர்வுகளின் கட்டுப்பாட்டிலிருந்து  விடுதலை அடைய வேண்டும். 

அன்பு, அமைதி, மனநிறைவு, உண்மை, பொறுமை, கருணை, இரக்கம், பிறர் நலம் விரும்புதல், சகிப்புத்தன்மை, பணிவு, அடக்கம், இறைநம்பிக்கை.., போன்ற நல்ல உணர்வுகள் மனதை ஆளுகை செய்ய வேண்டும்.

வேத வசனங்கள் மனதில் தொடர்ந்து விதைக்கப்படும் போது தீய செயல்கள் மீது கடும் வெறுப்பு உருவாகிறது.

நல்ல செயல்களை செய்ய வேண்டும் எனும் ஆவல் பிறக்கின்றது.

எனவே வேதத்தைத் தொடர்ந்து கற்க வேண்டும்.

3. இறை பிரசன்னத்தில் வாழ வேண்டும். (யாத்: 33:15)

பொருட்கள், பணம், அதிகாரம், உறவுகள் அளிக்கும் மகிழ்ச்சி தற்காலிகமானது. இவை இருக்கும் வரை சந்தோஷம் தொடரும். அனுபவித்தவுடன் மறைந்து போகும். 

அத்துடன் பணம், அதிகாரம், உறவுகளை இழந்து விடுவோமோ என்கிற அச்சம் நம்மை விடாமல் துரத்தும்.

இவற்றைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனும் கவலை மனதை விடாமல் அலைக்கழிக்கும். 

உண்மையான மகிழ்ச்சி என்பது வெளியில் தேடி ஓடி அடைவதல்ல. அது உள்ளத்தில் உணர்வது. 

மெய்யான சந்தோஷம் சூழ்நிலைகளால் பாதிக்கப்படுவதில்லை. 

உள்ளம் இறை பிரசன்னத்தில் நிலைத்து நிற்பதே உண்மையான நிலையான இன்பம்.

இந்த தெளிந்த புத்தியை அடைய வேதத்தை முறையாக் கற்பது அவசியம்.

வேத வசனங்கள் கடவுளை வெளிப்படுத்துகிறது. அவை மன மகிழ்ச்சியைத் தருகிறது. 

இறைமை என்பது ஓர் அனுபவம். கடவுளின் அன்பை உணர்ந்தால் கண்ணீர் வரும். ஆனால் கவலைகள் மறையும். மனதின் பாரம் குறையும். நம்பிக்கை பெருகும்.

இறைபிரசன்னத்தில் வாழ்வதை விட மேலான ஆசீர்வாதம் இந்த உலகில் வேறு எதுவும் இல்லை.

வேதத்தின் வார்த்தைகளைத் தொடர்ந்து தியானித்து வருவதன் மூலம் தேவ பிரசன்னம் எப்போதும் நம்முடன் இருக்கும். எனவே வேதத்தைக் கவனமுடன் கற்றுக் கொள்ள வேண்டும்.

4. பற்றுறுதி - வைராக்கியம் வளர வேண்டும். (எபிரேயர் 12:1) 

ஆழ்ந்த பக்தியில் நிலைத்திருப்பது எளிதானதல்ல. 

மனதைத் தூய்மையாகப் பாதுகாத்திட கடும் பிரயத்தனம் தேவைப்படுகிறது.

உண்மையாக வாழ முற்படும் போது பல முறை தோல்வி ஏற்படுகிறது. மனம் சோர்வடைகிறது. சலிப்பு வருகிறது.

எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் வாழ்வதற்கு முயற்சி தேவையில்லை. ஆனால் உயர்ந்த வாழ்க்கை வாழ கடும் உழைப்பு தேவை. அர்ப்பணிப்பு அவசியம். 

விளையாட்டு வீரர்களைக்  கவனித்துப் பாருங்கள். எவ்வளவு கவனமாக பயிற்சி பெறுகின்றனர். நேர்த்தியான பயிற்சியாளர். உணவில் கட்டுப்பாடு. உடலைப் பராமரிப்பதில் கடும் உழைப்பு.  துல்லியமான நேர நிர்வாகம். இலக்கு நோக்கி பயணம்.

இறை வாழ்க்கை வாழவும் இத்தகைய பயிற்சி தேவை. மனதில் வைராக்கியம் வேண்டும். 

பிடிவாதம் என்பது சுய ஆசையை நிறைவேற்ற விரும்புவது. வைராக்கியம் என்பது ஒரு உன்னத குறிக்கோளை அடைவதற்காக அர்ப்பணித்து வாழ்வது.

மனதில் வைராக்கியம் இருந்தால் தோல்விகளால் துவண்டு விட மாட்டோம். மனம் சோர்வில்  மூழ்கி விடாது. வீழ்ந்தாலும் மீண்டும் எழும்.

வேத வசனங்களை இடைவிடாது கற்றுக் கொள்வதன் மூலம் மனதில் வைராக்கியம் உண்டாகும்.

5. உரையாடலில் தெளிவு இருக்க வேண்டும். (1 தீமோ: 6:3-5)

நமது உரையாடல்கள் நம்மைச் சுற்றி வாழ்பவர்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக சமய உரையாடல். 

உறவுகளை மேம்படுத்த இறை உபதேசங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். 

சமய உரையாடல்கள் அன்பை விதைக்க வேண்டும். நம்பிக்கையை உருவாக்க வேண்டும். பிறர் நலம் விழைய வேண்டும். வாழ்வை நேர்மையான முறையில் வாழ ஊக்கம் தர வேண்டும். 

அவை ஒருபோதும் வெறுப்பு, துவேஷம் இவற்றைத் தூண்டக்கூடாது. பல அடிப்படை வாத சமய உரையாடல் கடும் அழிவை ஏற்படுத்தி இருக்கிறது 

வேதத்தின் மொழி அறிவியல் போலத் தர்க்க ரீதியாக ஆய்வு செய்த அறிக்கை மொழி கிடையாது. 

அவை அனுபவம் சார்ந்து எழுதப்பட்டவை. அன்பு எனும் அஸ்திவாரம் மேல் கட்டப்பட்டது. அவை நீதி, நியாயம் என்கிற வெளிச்சத்தில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அறம் அதன் மையம். இரக்கம், கருணை அதின் செயல் வடிவம்.

வேதத்தை முறையாகக் கற்பது மட்டும் போதாது. அதனைக் கடைப்பிடித்தும் வாழ வேண்டும். அவர்களுக்கு மட்டுமே வேதத்தின் உண்மைப் பொருள் வெளிப்படும்.

மிகத் தீவிரமான வாசிப்பு, அர்ப்பணிப்பு மிக்க வாழ்வு வாழ்ந்தவர்களால் எழுதப்பட்ட விளக்கங்கள் வேதத்தைப் புரிந்து கொள்ள உதவும்.  

அத்துடன் தாழ்மை உணர்வுடன் வேதத்தைக் கற்றுக் கொள்வது மிக முக்கியமான ஒன்று.

6. வளர்ச்சி அடைய வேண்டும். (1 பேதுரு: 2-3) 

ஒவ்வொரு நாளும் நமக்கு அருளப்படும் ஓர் கொடை. மேலும் கற்பதற்கு ஓர் வாய்ப்பு. 

கற்பதன் வழியாக மனம் மேம்படுகிறது. மனவளம் அடைகிறது. தீய உணர்வுகள் அகல்கின்றன. நல் உணர்வுகள் பெருகுகிறது.

மனதின் எண்ணங்கள் நேர்மறையாக உதிக்கின்றது. 

எனவே வாழ்வு வளர்ச்சி பெற வேதத்தை அனுதினமும் கற்க வேண்டும். தியானிக்க வேண்டும். கடைப்பிடிக்க வேண்டும்.

5 comments:

  1. அன்பு எனும் அஸ்திவாரம் மேல் கட்டப்பட்டது. அவை நீதி, நியாயம் என்கிற வெளிச்சத்தில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அறம் அதன் மையம். இரக்கம், கருணை அதின் செயல் வடிவம்.அருமையான உண்மை..

    ReplyDelete
  2. Praise the Lord.. Wonderful points appa..

    ReplyDelete
  3. வேதத்தில், பக்தி வைராக்கியம் என்னும் சொல் உள்ள வசனங்கள்..

    யோவான் 2:17
    எண்ணாகமம் 25 :11,13
    1 இராஜாக்கள் 19:10
    சங்கீதம் 69 : 9
    சங்கீதம் 119 :139
    2 கொரிந்தியர் 7:7,11
    கலாத்தியர் 1:14
    பிலிப்பியர் 3:6
    தீத்து 2:14



    வைராக்கியம் குறித்து,

    உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமை பாராட்டாதிருங்கள். சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள்.
    யாக்கோபு 3:14

    இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லௌகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது.
    யாக்கோபு 3:15

    வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச் செய்கைகளுமுண்டு.
    யாக்கோபு 3:16

    ReplyDelete
    Replies
    1. தீர்க்கதரிசி எலியா, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என வைராக்கியமாக வாழ்ந்த தேவ தாசர்கள் குறித்த வசனங்கள் நல்ல உதாரணம்.

      கசப்பான வைராக்கியம் குறித்த வசனங்கள் நல்லதொரு எச்சரிக்கை.

      மிக்க நன்றி.

      Delete