கிறிஸ்துவின் இரண்டாம் வருகை.
( They Believed in His Assurance of Second Coming.)
உலகில் ஜப்பான் தேசத்தில் தான் வயது முதிர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 29% மக்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
ஹெக்டர் கார்ஸியா (Hector Garcia) மற்றும் ஃப்ரான்செஸ்க் மிராஷெஸ் (Francesc Miralles) இருவரும் சிறந்த நண்பர்கள். அவர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.
அந்த ஆய்வின் நோக்கம் நீண்ட ஆயுளுடன் மன மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உதவும் வழி முறைகளைக் கண்டு பிடித்துத் தொகுப்பது ஆகும் (The Japanese Secret to a Long and Happy Life).
அவர்கள் Okinawa எனும் தீவில் வாழும் மக்களிடையே அந்த ஆய்வை மேற் கொண்டனர். ஏனெனில் அங்கு தான் அதிக முதிர் வயதான மக்கள் வாழ்ந்தனர்.
இதற்காக நூறு வயது கடந்த பலரிடம் நேர்காணல் நடத்தினர். அவர்களது உணவுப் பழக்கம், வேலை மீதான விருப்பம், அதைச் செய்த முறை, உடற்பயிற்சி, மனித உறவுகள் இப்படிப் பல கேள்விகளைக் கேட்டு அதற்கான விடையைத் தொகுத்தனர்.
அந்த விடைகளிலிருந்து மன மகிழ்ச்சியுடன் வாழ்ந்த முதியோரிடம் காணப்பட்ட பொதுவான ஒற்றுமை விடயங்களை வரிசைப் படுத்திப் பட்டியலிட்டனர்.
அவற்றுள் முக்கியமானது, "இந்த முதிர் வயதிலும் தாங்கள் வாழ்வதற்கு ஒரு காரணம் அல்லது ஒரு நோக்கம் இருக்கிறது" என அவர்கள் நம்பினார்கள்.
இந்த குறிப்பையே தங்களது புத்தகத்தின் தலைப்பாக (IKIGAI) சூட்டினார்கள். "இக்கிகய்" என்கிற ஜப்பானிய வார்த்தையின் அர்த்தம் "நோக்கம்" அல்லது "காரணம்" ஆகும்.
இந்தக் குறிப்பு அற்புதமானது. உண்மையானது. வாழ்வில் கட்டாயம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
அப்படியென்றால் "ஒரு கிறிஸ்தவரின் வாழ்க்கையில் எது நோக்கமாக இருக்க வேண்டும்?"
இயேசு கிறிஸ்து சீடர்களோடு மூன்றரை ஆண்டுகள் உடனிருந்தார். அப்போது சீடர்கள் கவலையின்றி வாழ்ந்தனர். இப்போது அவர் அவர்களுடனே இல்லை. சீடர்கள் வானத்தை அண்ணாந்து வெறித்துப் பார்த்தபடி கலங்கி நின்றனர். (அப் 1:10)
இந்த சமயத்தில் தேவ தூதர்கள் சொல்லிய தீர்க்க தரிசன வார்த்தைகள் அவர்களுக்கு வாழ வேண்டிய நோக்கம் குறித்த தெளிவைத் தந்தது.
தேவ தூதர்கள் சொன்ன அந்த வார்த்தை, "அவர் மறுபடியும் வருவார்" (மாரநாதா).
"ஆண்டவர் மீண்டும் வருவார்" என்ற தரிசன வாக்கு வாழ்க்கைக்கு புதிய அர்த்தத்தை அளிக்கிறது. ஆதித் திருச்சபையின் விசுவாசிகள் அந்த தீர்க்க தரிசன வாக்கை முழுவதும் நம்பினார்கள்.
ஆண்டவரை மீண்டும் சந்திப்போம் என்பதே அவர்களின் வாழ்க்கை நோக்கமாக இருந்தது. அதனால் அவர்கள் வெற்றி சிறந்த வாழ்க்கை வாழ்ந்தனர். அது அநேகருக்கு ஆசீர்வாதமாக அமைந்தது.
இன்றைய நிஜ உலகத்தில், யதார்த்த வாழ்வினில் நாம் பல மன அழுத்தங்களைச் சந்திக்கிறோம். அவை நம்மைச் சோர்வடையச் செய்கிறது. அப்போது என்ன வாழ்க்கை இது? எனச் சலிப்புடன் சொல்வதுண்டு.
ஆனால் இந்த தரிசன வாக்கை நினைவு கூற வேண்டும். அது "ஏன் வாழ வேண்டும்" என்கிற காரணத்தைக் கூறி மனதில் நம்பிக்கையை விதைக்கிறது.
ஒரு தேவனுடைய பிள்ளையின் வாழ்க்கையில் எது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்பதைக் கற்றுத் தருகிறது.
"ஆண்டவர் மறுபடியும் வருவார். அவர் எந்த நேரத்தில் வந்தாலும் அவரை மகிழ்வோடு எதிர் கொள்ளும் படி நான் வாழ வேண்டும்." என்பதைத் தனது வாழ்வின் நோக்கமாகத் தீர்மானிக்க வேண்டும்.
ஒருவர் இந்த தீர்மானத்தை மிகுந்த ஆர்வமுடன், ஈடுபாட்டுடன் ஏற்றுக் கொண்டு, அந்த இலக்கை அடைய வேண்டும் என்கிற நோக்கில் செயல் ஆற்ற வேண்டும். அப்போது அவரது வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும். மனநிறைவு அடைவர். ஒவ்வொரு நாளும் பயனுள்ள வகையில் அமையும்.
அப்படிப்பட்ட ஒரு அர்ப்பணிப்பு நிறைந்த வாழ்க்கையை வாழும் படி ஆண்டவர் எதிர்பார்க்கிறார்.
வேத வாக்கியத்தில் எழுதப்பட்டுள்ள இந்த வசனம் நம்மை உற்சாகப்படுத்தும்.
"நல்லது உண்மையும் உத்தமும் உள்ள பணியாளரே, சிறிய பொறுப்புகளிலும் கூட நீ நம்பிக்கைக்குரியவராக இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளிலும் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என்னுடைய மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்."
"Well done, good and trust worthy slave, you have been trust worthy in few things, I will put you in charge of many things ; enter into the joy of your Master."
St. Mathew 25:21
இத்துடன் இதற்குத் தொடர்புடைய இரண்டு வேத பகுதிகளை உங்கள் தனிப்பட்ட தியானத்திற்குக் குறிப்பிட விரும்புகிறேன்.
1. யோவான் 16: 16-22. (ஆண்டவரை மறுபடியும் பார்ப்போம். அப்போது நமது துக்கம் சந்தோஷமாக மாறும்).
2. லூக்கா 12: 22-40. (நாம் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார். ஆகையால் எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டும்).
அத்துடன் ஆண்டவரது இரண்டாம் வருகையில் நிகழ்பவை குறித்துப் பல தீர்க்க தரிசன வார்த்தைகள் வேதத்தில் எழுதப்பட்டுள்ளது.
பின் வரும் ஏழு தலைப்புகளில் அவற்றைத் தியானிப்பது இரண்டாம் வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்தும். விசுவாசம் வளர்ச்சி அடைய உதவும்.
1. தேவனுடைய ராஜ்யம்
2. கடைசி நாட்களில் நிகழ விருக்கும் சம்பவங்கள்.
3. சபை எடுத்துக் கொள்ளப்படுதல்.
4. அந்திக் கிறிஸ்து ஆளுகை - உபத்திரவமான காலங்கள்.
5. கிறிஸ்து மகிமையாகத் திரும்புதல்.
6. முதலாம் உயிர்த்தெழுதல் - ஆயிரம் வருட ஆட்சி.
7. இறுதி நியாயத்தீர்ப்பு - புதிய வானம் புதிய பூமி.
கர்த்தர் இவ்விதமான நோக்கம் நிறைந்த, அர்ப்பணிப்புடைய வாழ்க்கை வாழ்வதற்கு நம்மைத் தகுதி செய்வாராக. மாரநாதா. ஆமென்.

No comments:
Post a Comment