அப்போஸ்தல நடபடிகள்: பொதுவான குறிப்புகள்
நூலின் தலைப்பு :
மூல நூலில் இந்த புத்தகத்தின் தலைப்பு "நடபடிகள்" என்று எழுதப்பட்டுள்ளது. பிற்காலத்தில் திருச்சபைத் தலைவர்களால் "அப்போஸ்தல நடபடிகள்" எனும் தலைப்பு இடப்பட்டது. "APPO" என்பதன் பொருள் "போ". "STELLO" என்றால் "செய்தி". "நற்செய்தியுடன் சென்றவர்கள் செய்த செயல்களின் தொகுப்பு" என்று புரிந்து கொள்ள வேண்டும்.
ஆசிரியர் குறித்து மேலதிக தகவல்கள்:
"Proselyte" என்கிற வார்த்தை "யூத சமயத்தை விரும்பி ஏற்றுக் கொண்ட புற இனத்தைச் சேர்ந்தவர்களை" குறிப்பிடும் ஓர் சொல். இவர்களைக் குறித்து "யூத மார்க்கத்தமைந்தவர்" என வேதத்தில் கூறப்பட்டுள்ளது (அப்: 2:10). லூக்கா கிரேக்க இனத்தை விட்டு விட்டு யூத சமயத்தை விரும்பி ஏற்றவர் என நம்பப்படுகிறது.
அவர் எழுதிய இரண்டு நூல்களும் 'மகா கனம் பொருந்திய தெயோப்பிலு" என்பவருக்கு எழுதப்பட்டுள்ளது. தெயோப்பிலு அவர்களை "மகா கனம்" எனக் குறிப்பிடப்படுவதன் மூலம் இவர் மிக உயர்ந்த பொறுப்பை வகிப்பவர் எனப் புரிந்து கொள்ள முடிகிறது.
தெயோப்பிலு என்ற பெயரின் பொருள் தேவ நேசன். (Theo - God, Philio - Friendly Love). இவரும் கிரேக்கர் என்பது இவரது பெயர் மூலம் அறிய முடிகிறது. இவர் கிறிஸ்தவ உபதேசங்களைத் தெளிவாக அறிந்து கொள்ள விரும்பினார் (லூக்கா 1:3).
திருமுறையில் லூக்காவின் பங்களிப்பு :
புதிய ஏற்பாடு குறித்து AGNT (Analytical Greek New Testament), அளிக்கும் தகவல்கள் சுவாரஸ்யமானது.
"புதிய ஏற்பாடு" புத்தகத்தில் மொத்தம் 1,38,020 கிரேக்க வார்த்தைகள் உள்ளது. அவற்றுள் புனித லூக்கா 37, 933 வார்த்தைகள் எழுதியுள்ளார். இது 27% பங்களிப்பு ஆகும். புனித பவுல் 13 நிருபங்கள் வழியாக 32,407 வார்த்தைகள் எழுதியுள்ளார். இது 23% ஆகும். புனித யோவான் 5 நூல்கள் மூலம் 20% வார்த்தைகள் எழுதியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக லூக்கா அவர்கள் புதிய ஏற்பாடு நூலில் மிக அதிக பங்களிப்பு வழங்கியுள்ளார்.
இந்த புத்தகம் ஒரு தொடர் சரித்திரம் :
இந்த புத்தகம் ஐந்தாவது நற்செய்தி நூல் என அழைக்கப்படுகிறது. "வில்லியம் ராம்ஸே" அவர்கள் இந்த புத்தகம் ஒரு உயர்ந்த சரித்திர நூல் எனக் கூறியுள்ளார். ஆதியாகமம் பௌதீக உலகின் துவக்கத்தைக் கூறுகிறது. இந்த நூல் திருச்சபையின் தோற்றத்தைக் கூறுகின்றது
இப் புத்தகத்தில் 28 அதிகாரங்கள், 1006 வசனங்கள் உள்ளன. ஏறக்குறைய 30 வருட காலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் எழுதப்பட்டுள்ளது. எனினும் இதன் இறுதிப் பகுதி எவ்விதமான முடிவுரையும் இல்லாமல் சட்டென்று நிறைவடைகிறது.
இதன் பொருள் இந்த சரித்திரம் ஒரு தொடர் கதை. அது கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரை தொடர்ந்து விசுவாசிகளால் எழுதப் பட வேண்டும்.
உண்மையில் அது அவ்விதமாகவே கடந்த 2021 வருடங்களாகப் பல தேவ மனிதர்களால் எழுதப் பட்டு வந்திருக்கிறது. இந்த உலகில் உள்ள ஒவ்வொரு தேசத்திலும் பல இரத்த சாட்சிகள் வழியாக அது எழுதப்பட்டது.
இன்று ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு தனித்துவ திருச்சபை வரலாறு இருக்கிறது. அது தொடர்ந்து ஆவியானவர் வழியாகத் தேவ மனிதர்களால் எழுதப் பட்டும் வருகிறது.

No comments:
Post a Comment